திம்பம் மலைப்பாதையில் கடமானை துரத்தி வந்த சிறுத்தை; நேரில் பார்த்த சுற்றுலா பயணிகள் சத்தமிட்டதால் ஓடியது


திம்பம் மலைப்பாதையில் கடமானை துரத்தி வந்த சிறுத்தை; நேரில் பார்த்த சுற்றுலா பயணிகள் சத்தமிட்டதால் ஓடியது
x
தினத்தந்தி 21 Oct 2018 4:15 AM IST (Updated: 21 Oct 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் கடமானை துரத்தி வந்த சிறுத்தையை சுற்றுலாப்பயணிகள் நேரில் பார்த்து சத்தமிட்டதால் ஓடியது.

பவானிசாகர்,

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் இருந்து திம்பம் மலைப்பாதை வரை 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இணைப்புச் சாலை என்பதால் இந்த பாதையில் போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த கொண்டை ஊசி வளைவுகளின் இரு பக்கங்களும் அடர்ந்த வனங்களால் சூழப்பட்டது.

இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை, செந்நாய், மான் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக வசித்து வருகிறது. குறிப்பாக திம்பம் மலைப்பாதையில் 4–வது கொண்டை ஊசி வளைவு முதல் 7–வது கொண்டை ஊசி வளைவு வரை சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

கடந்த மாதம் 5–வது கொண்டை ஊசி வளைவு அருகே நடுரோட்டில் நின்று கொண்டு 2 சிறுத்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து வியந்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் சிறுத்தையின் நடமாட்டத்தை வாகன ஓட்டிகள் பார்த்தனர்.

மாலை 5 மணி அளவில் 6–வது கொண்டை ஊசி வளைவு வழியாக கோவை ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் சுற்றுலா பயணிகள் சிலர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கடமான் ரோட்டில் தலைத்தெறிக்க வேகமாக ஓடியது. அதனை சிறுத்தை துரத்தியபடி பின்னால் ஓடி வந்தது. இதை பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனடியாக தங்கள் வாகனத்தை நிறுத்தி சத்தம்போட்டு அலறினார்கள்.

சத்தம் கேட்டு சிறுத்தை வந்த வழியாக திரும்பி ஓடியது. சிறுத்தையிடம் இருந்து தப்பித்த கடமான் ரோட்டின் ஓரத்தில் உள்ள பாறைக்கு சென்றது. அதன் மீது ஏறி நின்றுகொண்டு தன்னை காப்பாற்றிய சுற்றுலாப்பயணிகளை நன்றி கூறும் வகையில் பார்த்தது. அதன் முகத்தில் சிறிய காயம் இருந்தது. அது சிறுத்தை தாக்கியதால் வந்த காயமா அல்லது சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க முட்புதரில் ஓடி வரும் போது ஏற்பட்ட காயமா? என தெரியவில்லை.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் அந்த கடமான் அந்த இடத்தை விட்டு நகரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story