சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு: அய்யப்ப பக்தர்கள் ஊர்வலம் ராசிபுரத்தில் நடந்தது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராசிபுரத்தில் அய்யப்ப பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் ஆகம விதிகளை தகர்த்து பெண்களை அனுமதிப்பது, சாமி தரிசனம் செய்யலாம் என வழங்கப்பட்ட தீர்ப்பால் சபரிமலை கோவிலில் உருவாக போகும் பாரம்பரிய பழக்க வழக்க மாறுதல்களும், கலாசார பாதிப்பு மற்றும் ஆன்மிக சங்கடங்களை தடுக்க வேண்டியும், சபரிமலையில் புனிதத்தை காக்கவேண்டியும் ராசிபுரம் கோனேரிப்பட்டியில் உள்ள ஸ்ரீதர்மசாஸ்தா சாமியிடம் ராசிபுரம் அய்யப்ப பக்தர்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
முன்னதாக, சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராசிபுரம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து வேட்டுகள், பட்டாசு வெடித்து அய்யப்ப பக்தர்கள் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக கோனேரிப்பட்டியில் உள்ள தர்மசாஸ்தா கோவிலை வந்தடைந் தது. ஊர்வலம் புறப்படும் முன்பு விநாயகர் கோவில் அருகில் கலந்து கொண்டவர்கள் சபரிமலையை பொருட்காட்சியாக மாற்றிட வேண்டாம் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
கோனேரிப்பட்டி தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். பிறகு ராசிபுரம் கைலாசநாதர் துர்கா மகளிர் மன்ற தலைவி வாசுகி உறுதிமொழி வாசிக்க இதில் கலந்துகொண்ட அய்யப்ப பக்தர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். பின்னர் தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில் உள்ள அய்யப்ப சாமியிடம் மனு கொடுத்தனர். தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அய்யப்ப குருசாமி ராமமூர்த்தி, ரமணன், நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் வக்கீல் கார்த்திகேயன், விஸ்வ இந்து பரிஷத் கோட்ட செயலாளர் ரகுபதி, பா.ஜ.க. தொழில்பிரிவு துணைத்தலைவர் சேது, பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் சித்ரா, மூத்தோர் அணி தலைவர் மாணிக்கம், ராமமூர்த்தி உள்பட நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story