வில்லியனூர் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி கவர்னர் கிரண்பெடி ஆய்வு
வில்லியனூர் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார்.
வில்லியனூர்,
புதுவை மாநிலத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளம், வாய்க்கால்களை தூர்வார கவர்னர் கிரண்பெடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி தனியார் நிறுவன பங்களிப்புடன் வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் ஆத்துவாய்க்கால், குடுவையாறு வாய்க்கால், சுத்துக்கேணி வாய்க்கால் தூர்வாரப்படுகிறது. இந்த பணிகளை கவர்னர் கிரண்பெடி நேற்று ஆய்வு செய்தார்.
இதற்காக புதுவை கவர்னர் மாளிகையில் இருந்து அரசு போக்குவரத்து கழக பஸ்சில் பிள்ளையார்குப்பம் ஆத்துவாய்க்காலுக்கு கவர்னர் வந்தார். அங்கு தூர்வாரும் பணியை பார்வையிட்டு, பருவமழைக்கு முன்பாக பணிகளை முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
இதன்பின் குடுவையாறு வாய்க்கால் பகுதியை கவர்னர் ஆய்வு செய்தார். ஆனால் வாய்க்கால் பகுதிக்கு பஸ் செல்ல முடியாது என்பதால் சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் கவர்னர் கிரண்பெடி நடந்தே சென்று வாய்க்கால் தூர்வாரும் பணியை பார்வையிட்டார். பின்னர் சுத்துக்கேணி வாய்க்காலுக்கு சென்று, அங்கு நடைபெற்ற பணியை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து கோர்க்காடு ஏரியை பார்வையிட கவர்னர் கிரண்பெடி வருவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த பகுதியை ஆய்வு செய்யாமல் புதுவைக்கு கிரண்பெடி திரும்பினார். நீண்டநேரம் காத்திருந்த கோர்க்காடு பகுதி மக்கள், கவர்னர் வராததால் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த ஆய்வில் கவர்னர் மாளிகை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.