மாவட்டத்தில் போலீசார் சார்பில் கிராமங்களில் புகார் பெட்டிகள்


மாவட்டத்தில் போலீசார் சார்பில் கிராமங்களில் புகார் பெட்டிகள்
x
தினத்தந்தி 21 Oct 2018 3:45 AM IST (Updated: 21 Oct 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் போலீசார் சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்படுகின்றன.

முக்கிய சம்பவங்கள் குறித்து போலீசிற்கு நேரிடையாக தகவல் கூறமுடியாத நிலையை தவிர்க்கவும், ரகசிய தகவல்களை கூறவும் காவல் துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் இந்த புகார் பெட்டிகளில் பொதுமக்கள் தங்களது புகார்களை மனுவாக எழுதி போடலாம். இந்த மனுக்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் உத்தரவின் பேரில் கிராமங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்படுகின்றன.

அதன்படி தாரமங்கலம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட தாரமங்கலம், சிக்கம்பட்டி, குருக்கம்பட்டி, கோனகாப்பாடி, கருக்கல்வாடி, அழகுசமுத்திரம், செம்மண்கூடல், தெசவிளக்கு பாப்பம்பாடி, ராமிரெட்டிப்பட்டி, ஆரூர்பட்டி, மல்லிகுட்டை, கசுவரெட்டிப்பட்டி ஆகிய 13 ஊர்களில் பொதுவான இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகளை போலீசார் தினமும் சேகரித்து புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகார் அளிப்பவர்கள் பற்றிய தகவல் ரகசியம் காக்கப்படும் என்று தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி கூறினார்.

பூலாம்பட்டி போலீஸ் நிலையம் சார்பில் கிராமம் தோறும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன. பூலாம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நெடுங்குளம், வெள்ளரிவெள்ளி, சித்தூர், இருப்பாளி, ஆடையூர், பக்கநாடு கிராமங்களுக்கான புகார் பெட்டிகள் மற்றும் குறிப்பேடு புத்தகங்களை சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், நாகராஜ் ஆகியோர் போலீசாரிடம் வழங்கினார்கள்.

மல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு புகார் பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி அம்மாபாளையம், சந்தியூர், ஆட்டையாம்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, பாரப்பட்டி, மூக்குத்திபாளையம், வாழக்குட்டப்பட்டி, நாழிக்கல்பட்டி உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு புகார் பெட்டிகள் வழங்கப்பட்டன. இதனை மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் போலீசாரிடம் வழங்கினார். மேலும் அவர், தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் புகாராக எழுதி இந்த பெட்டிக்குள் போடலாம். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள 15 போலீசார் வாரத்திற்கு ஒரு முறை வந்து புகார் பெட்டியில் உள்ள மனுக்களை பார்த்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

தேவூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் பொதுமக்கள் எளிதில் புகார் தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டிகள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனை போலீஸ் சப்-இன்ஸ்பெகட்ர் பிரகாஷ் தலைமையில் போலீசார் புள்ளகவுண்டம்பட்டி அக்ரஹாரம், கத்தேரி, ஆல்த்தூர் ரெட்டிபாளையம், அரசிராமணி, தேவூர் பேரூராட்சி உள்பட 11 இடங்களில் புகார் பெட்டிகளை வைத்தனர்.

Next Story