கல்வித்துறை சார்பில் 5 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நாளை தொடங்குகிறது


கல்வித்துறை சார்பில் 5 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 21 Oct 2018 4:00 AM IST (Updated: 21 Oct 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் 5 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நாளை தொடங்கி நடைபெறுகிறது.

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி, வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 5 வட்டார வள மையங்களிலும் மருத்துவ குழுக்களை கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாளை (திங்கட்கிழமை) பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 24-ந் தேதி தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 25-ந் தேதி வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 26-ந் தேதி வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

கல்வித்துறை சார்பில் நடக்கும் இந்த முகாமில் கை, கால் பாதிக்கப்பட்டோர், காது கேளாதோர், வாய் பேசாதவர், மனவளர்ச்சி குன்றியவர்கள், மூளை முடக்குவாதம், கண் பார்வையற்றோர் மற்றும் பல்வகை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். பின்னர் மருத்துவர்களால் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு அவர்களின் தீவிர தன்மையின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் தேர்வு செய்யும் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. முகாமில் கலந்து கொள்ளும் பள்ளி வயது மாணவர்களுக்கு போக்குவரத்து பயணப்படி, உணவு மற்றும் தேநீர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். முகாமிற்கு வருபவர்கள் 4 புகைப்படம், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை நகல் எடுத்து வரவேண்டும். மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story