தொடர் நீர்வரத்து எதிரொலி: முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை - உபரி நீர் வெளியேற்றம்
தொடர் மழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் 68.5 அடியை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து கரையோர மக்களுக்கு 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை நிரம்பியது. இதையடுத்து வைகை அணையில் இருந்து மதுரை, திருமங்கலம், மேலூர் ஆகிய பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. மேலும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக ஆற்று வழியாகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது. இதன்காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 55 அடிக்கும் கீழே சரிந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. குறிப்பாக வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியது.
ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகரித்ததால் வைகை அணைக்கான நீர்வரத்து உயர்ந்தது. இதனால் வைகை அணை நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த 15-ந்தேதி இந்த ஆண்டில் 2-வது முறையாக வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியது. இதையடுத்து வைகை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 68.5 அடியை எட்டியது. இதனையடுத்து 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை அபாய ஒலி மூலம் விடுக்கப்பட்டது.
பொதுப்பணித்துறையின் உதவி செயற்பொறியாளர் செல்வம் அபாய ஒலி பொத்தானை அழுத்தினார். இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. அணையின் உயரம் 71 அடியாக இருந்தாலும் 69 அடி தான் முழு கொள்ளளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அணையில் இருந்து தண்ணீர் உபரி நீராக ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 2-வது முறையாக வைகை அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று மாலை நிலவரப்படி வைகை அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 619 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும், பாசனத்திற்கும் சேர்த்து வினாடிக்கு 1,560 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 5 ஆயிரத்து 446 மில்லியன் கனஅடியாக இருந்தது. நள்ளிரவில் 4 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
Related Tags :
Next Story