சர்க்கஸ் நடத்துவது சாதாரண விஷயம் கிடையாது: ‘அ.தி.மு.க.வுக்கு திறமை இருப்பதால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்’ மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
சர்க்கஸ் நடத்துவது சாதாரண விஷயம் கிடையாது என்றும், அ.தி.மு.க.வுக்கு திறமை இருப்பதால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- சபரிமலைக்கு பெண்கள் செல்வது...
பதில்:- அது சுப்ரீம் கோர்ட்டினுடைய தீர்ப்பு. அதில் விமர்சனத்திற்கோ, கருத்து சொல்வதற்கோ எதுவுமில்லை.
கேள்வி:- மத்திய உள்துறை அமைச்சகம் கேரளா பிரச்சினையையடுத்து, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் பாதுகாப்பு கருதி ஒரு அறிக்கை அனுப்பியிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். எப்படிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?.
பதில்:- தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. அந்த சம்பவம் நடைபெறுவதற்கு எவ்வித வாய்ப்பும் கொடுக்காத அளவிற்கு காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருக் கின்றது.
கேள்வி:- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நவம்பர் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்களே?.
பதில்:- ஏற்கனவே ஜாக்டோ-ஜியோ அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பளக்குழு அறிவிக்கப்பட்டு ஊதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அவர்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகள் எல்லாம் அரசால் அதற்கென்று ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆகவே, இன்றைக்கு அ.தி.மு.க. அரசைப் பொறுத்தவரை, அரசு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. நிதிநிலைக்கு ஏற்றவாறு, அவர்கள் வைத்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
கேள்வி:- ஏற்கனவே இருந்த ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று சொல்கிறார்களே?.
பதில்:- அது ஒரு மாநிலத்திலோ, இரண்டு மாநிலங்கள் தவிர வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.
கேள்வி:- தேர்தல் வாக்குறுதியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த மாதிரி செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள்?.
பதில்:- நிதி ஆதாரம் இல்லையே, நிதி ஆதாரம் இருந்தால்தானே எல்லாம் கொடுக்க முடியும். தமிழகத்தின் 7-வது ஊதியக்குழு வகையில் ரூ.14,719 கோடி அதற்கு மட்டும் அரசு கூடுதலாக செலவழிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படியும் உயர்த்தியிருக்கிறார்கள். அதில் கிட்டத்தட்ட ரூ.1,200 கோடி வழங்கப்படுகிறது. இப்படி அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது முறைப்படி அரசால் தக்க உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கேள்வி:- இந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறதா?.
பதில்:- அரசாங்கத்தின் நிதிச்சுமை குறித்து அரசு ஊழியர்களுக்கு முழுக்க முழுக்க தெரியும். ஏனென்றால், அவர்கள்தான் இந்த அரசாங்கத்தையே நடத்தக்கூடிய ஒரு நிலையில் இருக்கின்றவர்கள். அரசாங்கத்தின் நிதிநிலைமை அவர்களுக்கு நன்றாக புரியும், அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி:- பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?.
பதில்:- ஏற்கனவே பலமுறை அவர்களை அழைத்துப் பேசியிருக்கிறோம். அந்தத் துறையைச் சார்ந்த அமைச்சகம் மற்றும் துறைச் செயலாளர் அழைத்து பேசுவார்கள்.
கேள்வி:- தமிழக முதல்-அமைச்சர் மட்டும் எங்களை அழைத்துப் பேசுவதில்லை என்று அவர்கள் கூறுகிறார்களே?.
பதில்:- கடந்த காலத்தில் சுமார் 2 வருடம் வரை அதை நீட்டித்துத்தான் வழங்கினார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல. அதைப் புரிந்து, அ.தி.மு.க. அரசு அவர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் சம்பளத்தை வழங்கி வருகிறது. அவர்கள் எந்தக் கோரிக்கை வைப்பதற்கு முன்னர் உடனே வழங்கியிருக்கிறோம்.
கேள்வி:- எங்களுடைய போராட்டம் தொடரும் என்று தான் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்...
பதில்:- நாட்டில் எல்லோருக்கும் கேட்க உரிமையுண்டு. இது ஜனநாயக நாடு, அந்த அடிப்படையில் அவர்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
கேள்வி:- தி.மு.க.வை கம்பெனி என்று விமர்சனம் செய்ததற்காக, அ.தி.மு.க. சர்க்கஸ் கூடாரம் என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தது குறித்து.
பதில்:- ஆமாம், அவர் கம்பெனி என்று ஒத்துக்கொண்டுவிட்டார் அல்லவா. அதற்கு நன்றி. நாங்கள் சொன்னது சரி என்று ஒப்புக் கொண்டார் அல்லவா.
கேள்வி:- ரிங் மாஸ்டர் டெல்லியில் இருக்கிறார், உங்களை வந்து கோமாளி என்று விமர்சனம் செய்திருக்கிறார்.
பதில்:- சர்க்கஸ் என்பது சாதாரண விஷயமில்லை. நீங்களும், நானும் போய் விளையாட முடியாது. உள்ளே போய் திறமையை காட்ட வேண்டும். சர்க்கஸ் என்ற அந்த அரங்கிலே என்னுடைய திறமையை வெளிக்காட்டி மக்களுடைய நன்மதிப்பை நான் பெற்று கொண்டிருக்கிறேன். ஆகவே, அதற்கு ஒரு திறமை வேண்டும். திறமை இருந்தால் தான் அதையும் செய்ய முடியும். எங்களுக்கு ஆட்சி செய்கின்ற திறமை இருக்கின்ற காரணத்தினாலே நிறைய திட்டங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கி இன்றைக்கு நல்ல பெயர் எடுத்துக்கொண்டு இருக்கின்றோம். ஆகவே, அவர் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலை இல்லை. எங்களை பொறுத்தவரைக்கும் மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள், திட்டங்களை அளித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி:- 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு நிச்சயமாக அ.தி.மு.க.வுக்கு எதிராக அமையும், அ.தி.மு.க.வுடைய நிலைப்பாடு அப்பொழுது தான் தெரியும் என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்:- அவர் என்ன ஜோசியக்காரரா?. நீதிமன்றத்தில் தீர்ப்பு இருக்கிறது. நம்முடைய வாதத்தை வைத்திருக்கிறோம். அவர்களுடைய வாதத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். நீதிமன்றம் தான் தீர்ப்பு கொடுக்கும். ஸ்டாலின் தீர்ப்பு கொடுப்பது இல்லை. நீதிமன்றத்தை பொறுத்தவரைக்கும், ஒரு கோவில் போல் நாங்கள் நினைக்கிறோம். நீதி நிச்சயம் கிடைக்கும். நீதி எப்பொழுதும் வெல்லும், தர்மம் வெல்லும், உண்மை வெல்லும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
Related Tags :
Next Story