கோவை அருகே: சாலையின் தடுப்புச்சுவரில் பஸ் மோதி 4 பேர் படுகாயம்


கோவை அருகே: சாலையின் தடுப்புச்சுவரில் பஸ் மோதி 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Oct 2018 9:30 PM GMT (Updated: 20 Oct 2018 9:10 PM GMT)

கோவை அருகே சாலையின் தடுப்புச்சுவரில் பஸ் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பேரூர்,


ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த தனியார் சுற்றுலா பஸ் கோவையை அடுத்த பேரூர் அருகே காருண்யா நகர் நோக்கி நேற்று அதிகாலை 3 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ், சிறுவாணி ரோடு சென்னனூர் தண்ணீர் பந்தல் பிரிவு அப்பிச்சிமார் கோவில் அருகே திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அந்த பஸ் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் பலமாக மோதி உள்ளே புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சல் போட்டனர்.
தடுப்புச்சுவரில் மோதியதில் பஸ்சின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. மேலும் பஸ்சில் பயணம் செய்த நெல்லூரைச் சேர்ந்த ரத்தினம் (வயது 59), எட்டிபிரசாத் (65), மைக்கேல்(53), பினாய்(22) ஆகிய 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் 4 பேர் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து குண்டூரை சேர்ந்த பஸ் டிரைவர் கல்யாண்(வயது 38) என்பவர் மீது பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story