சாணார்பட்டி அருகே: குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - பஸ் சிறைபிடிப்பு
சாணார்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் அங்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.
கோபால்பட்டி,
சாணார்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சி தலையாரிபட்டியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் தலையாரிபட்டியில் செயல்பட்ட ஆழ்துளை கிணறுகள் வறண்டுபோனதால் பொதுமக்கள் குடிநீருக்காக குடங்களை தூக்கிகொண்டு அருகே உள்ள ராமராஜபுரம் வேட்டைக்காரன்புதூர் கிராமத்துக்கும், தோட்டங்களுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வந்தனர்.
எனவே புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து அதன்மூலம் மேல்நிலைதொட்டிக்கு தண்ணீர் ஏற்றி குழாய்கள் மூலம் வீட்டு இணைப்புகளுக்கு அல்லது பொதுகுழாய்களில் குடிநீர் வழங்க வேண்டும் என்று சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை 9 மணிஅளவில் தலையாரிபட்டியில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் திண்டுக்கல்லில் இருந்து தலையாரிபட்டிக்கு வந்து செல்லும் அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திம்மணநல்லூர் ஊராட்சிமன்ற செயலர் ரவிச்சந்திரன் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தலையாரிபட்டி கிராமத்திற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் பஸ்சையும் விடுவித்தனர். இந்த மறியலால் அந்த பஸ் ஒரு மணி நேரம் தாமதமாக தலையாரிபட்டியிலிருந்து திண்டுக்கல் புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story