விழா முடிவடைந்ததையொட்டி தசரா யானைகள் இன்று முகாம்களுக்கு திரும்புகின்றன


விழா முடிவடைந்ததையொட்டி தசரா யானைகள் இன்று முகாம்களுக்கு திரும்புகின்றன
x
தினத்தந்தி 20 Oct 2018 11:00 PM GMT (Updated: 20 Oct 2018 9:41 PM GMT)

தசரா விழா முடிவடைந்ததையொட்டி அர்ஜூனா யானை உள்பட 12 யானைகளும் இன்று யானைகள் முகாம்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மைசூரு,

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா நேற்று முன்தினம் ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதற்காக கடந்த 1½ மாதங்களுக்கு முன்பே ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் 12 யானைகள் மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டன. அவைகள் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டன. மேலும் அவைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

நேற்று முன்தினம் ஜம்பு சவாரி ஊர்வலம் கோலாகலமாக நடந்து முடிந்ததையடுத்து நேற்று அர்ஜூனா யானைகள் உள்பட அனைத்து யானைகளும் மைசூரு அரண்மனை வளாகத்தில் ஓய்வெடுத்தன. அவைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. மேலும் உற்சாக குளியல் போட்ட யானைகள், நன்றாக ஓய்வெடுத்தன. இன்று(ஞாயிற்றுக்கிழமை) அர்ஜூனா உள்பட 12 யானைகளும் லாரிகள் மூலம் யானைகள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தசரா விழா முடிவடைந்தாலும், குப்பண்ணா பூங்காவில் தசரா மலர் கண்காட்சியும், ஹெலிகாப்டரில் மைசூரு நகரை சுற்றிப் பார்க்கும் வசதியும் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுக்கும் பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் இன்னும் 2 நாட்களுக்கு இவை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், நாளை(திங்கட்கிழமை) அல்லது நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) இவை 2-ம் நிறைவடையும் என்றும் தசரா கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தசரா விழாவைக்காண கர்நாடகம் மட்டுமல்லாது, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பேர் மைசூருவில் குவிந்திருந்தனர். நேற்று முன்தினம் விழா முடிவடைந்ததையொட்டி, நேற்று வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மைசூருவில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.

இதனால் நேற்று மைசூரு நகரம் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மிருகக்காட்சி சாலை, அரண்மனை, சாமுண்டி மலை, பிருந்தாவன் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மைசூரு நகரமே ஸ்தம்பித்தது. இதையடுத்து மைசூரு டவுன் முழுவதும் போலீசார் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை சீரமைத்தனர்.

Next Story