‘தி வில்லன்’ படம் வெற்றி பெறுவதற்காக ரசிகர்கள் நூதன வேண்டுதல் ஆடுகளை வெட்டி ரத்தத்தை பேனர்களில் தெளித்தனர்


‘தி வில்லன்’ படம் வெற்றி பெறுவதற்காக ரசிகர்கள் நூதன வேண்டுதல் ஆடுகளை வெட்டி ரத்தத்தை பேனர்களில் தெளித்தனர்
x
தினத்தந்தி 21 Oct 2018 4:30 AM IST (Updated: 21 Oct 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

‘தி வில்லன்‘ படம் வெற்றி பெறுவதற்காக நடிகர் சுதீப்பின் ரசிகர்கள் நூதன முறையில் வேண்டுதல் நடத்தினர். அதாவது ஆடுகளை வெட்டி அதன் ரத்தத்தை சுதீப்பின் பேனர்களில் தெளித்தனர்.

சிக்கமகளூரு,

கன்னட நடிகர்களான சிவராஜ்குமார் ஹீரோவாகவும், சுதீப் வில்லனாகவும் நடித்து சமீபத்தில் திரைக்கு ‘தி வில்லன்‘ என்ற படம் வந்து உள்ளது. இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று மாநிலம் முழுவதும் சிவராஜ்குமார், சுதீப் ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். மேலும் பல தியேட்டர்களில் சிவராஜ்குமார், சுதீப்பின் பேனர்களுக்கு பால் அபிஷேகமும் செய்து வருகிறார்கள்.

இதேப்போல தாவணகெரே மாவட்டம் ஜகலூர் டவுனில் உள்ள ஒரு தியேட்டரிலும் தி வில்லன் படம் திரையிடப்பட்டு உள்ளது. அந்த படத்தை பார்க்க வந்த சுதீப்பின் ரசிகர்கள், சுதீப்பின் பேனர் களுக்கு நூதன முறையில் வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்தனர். அதன்படி அங்கு ஆடுகளை அழைத்து வந்த சுதீப்பின் ரசிகர்கள், அந்த ஆடுகளை அரிவாளால் வெட்டி பலியிட்டனர். பின்னர் ஆடுகளின் ரத்தத்தை சுதீப்பின் பேனர்களில் தெளித்தனர்.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்தில் ஆடு, மாடுகளை பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் ஆடுகளை வெட்டி சுதீப்பின் ரசிகர்கள் ரத்தத்தை அவரது பேனர்களில் தெளித்ததற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும் இதுகுறித்து ஜகலூர் டவுன் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆடுகளை வெட்டி பலி கொடுத்தவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Next Story