ஆன்-லைனில் மதுபானங்கள் விற்க திட்டம் கர்நாடக அரசு முடிவு


ஆன்-லைனில் மதுபானங்கள் விற்க திட்டம் கர்நாடக அரசு முடிவு
x
தினத்தந்தி 21 Oct 2018 3:45 AM IST (Updated: 21 Oct 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தை தொடர்ந்து கர்நாடகத்தில் ‘ஆன்-லைன்’ மூலமாக மதுபானங்கள் விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வருமானத்தை பெருக்கும் நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு,

மராட்டிய மாநிலத்தில் மதுஅருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டுவதால் ஏராளமான விபத்துகள் உண்டாகி உயிர் இழப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் மராட்டிய மாநில அரசு மதுபானங்களை அம்மாநில மக்களுக்காக, வீடுகளுக்கே நேரடியாக கொண்டு சென்று விற்க முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதை தடுக்கவும், விபத்துகளை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் ‘ஆன்-லைன்’ மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்ய கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக பெலகாவியில் நடைபெற உள்ள சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மதுபான விற்பனை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, மதுபானங்களை ‘ஆன்-லைன்’ மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

முதல்-மந்திரி குமாரசாமி, விவசாய கடன் ரூ.45 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். விவசாய கடன் தள்ளுபடியால் கர்நாடக அரசு நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாக தெரிகிறது. இதனால் மதுபானங்கள் விற்பனை மூலம் ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் கூடுதலாக மதுபான கடைகள் திறக்கவும் அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலத்தில் புதிதாக மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படாது என்று முதல்-மந்திரி குமாரசாமி திட்டவட்டமாக கூறினார்.

இதையடுத்து, வருவாயை பெருக்கும் நோக்கத்தில் ‘ஆன்-லைன்’ மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாகவும், அவ்வாறு விற்பனை செய்தால் கிடைக்கும் லாபம்-நஷ்டம் பற்றி கலால்துறை அதிகாரிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ‘ஆன்-லைன்’ மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யும் திட்டம் அரசு மதுபானக்கடைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்படுகிறது. 

Next Story