லாரி மீது கார் மோதல்: கணவன்-மனைவி உள்பட 3 பேர் பலி - திண்டிவனம் அருகே பரிதாபம்
திண்டிவனம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திண்டிவனம்,
சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் மூக்கையா தேவர் மகன் விஜயகுமார் (வயது 29). இவரது மனைவி சபரி(25). இவர்களுக்கு நானி என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. விஜயகுமார் சென்னை திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தொடர் விடுமுறையையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று தனது மகள் நானிக்கு மொட்டையடித்து, காது குத்த வேண்டும் என விஜயகுமார் முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜயகுமார் தனது மனைவி சபரி, மகள் நானி, மாமியார் ராமலட்சுமி(45), நண்பர் ஜான்சாமுவேல்(29), அவரது மனைவி வின்சிமேரி(24) ஆகியோருடன் ஒரு காரிலும், மற்றொரு காரில் அவரது நண்பர்கள் மட்டும் சென்னையில் இருந்து தேனிக்கு புறப்பட்டனர்.
விஜயகுமார் சென்ற காரை சென்னை குன்றத்தூரை சேர்ந்த அருண்(24) என்பவர் ஓட்டினார். தேனியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றதும் அங்கு நானிக்கு மொட்டையடித்து காது குத்தினர். இதை தொடர்ந்து அங்கு சாமி கும்பிட்டு விட்டு, ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர்.
ஊட்டியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்த அவர்கள், நேற்று முன்தினம் இரவு மீண்டும் 2 கார்களில் சென்னைக்கு புறப்பட்டனர். விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார் நேற்று அதிகாலை 5 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாரம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த பகுதியில் லாரி ஒன்று பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அருண் ஓட்டிச் சென்ற கார் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் விஜயகுமார், சபரி, ராமலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஜான்சாமுவேல், வின்சிமேரி, அருண், நானி ஆகியோர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து படுகாயமடைந்த ஜான்சாமுவேல், நானி உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான விஜயகுமார், சபரி, ராமலட்சுமி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள், விபத்துக்குள்ளான காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story