ஷட்டர் பழுது; ஆனைகுட்டம் அணை தண்ணீர் வீணாக வெளியேறியது
சிவகாசி அருகே உள்ள ஆனைகுட்டம் அணையில் ஷட்டர் பழுதால் அணை தண்ணீர் வீணாக வெளியேறியது.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள ஆனைகுட்டம் அணை மற்றும் அணையின் அருகில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு விருதுநகர், திருத்தங்கல் நகராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அணையில் கோடைகாலங்களில் கூட தண்ணீர் தேக்கி வைக்கப்பட்ட நிலை இருந்தது. இந்த தண்ணீரை பயன் படுத்தி அந்த பகுதியில் பல ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அணையில் உள்ள ஷட்டர் ஒன்று பழுதானது. இதனால் மழைக் காலங்களில் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் இந்த ஷட்டர் வழியாக வீணாக வெளியேறியது. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீரை திறந்துவிட்டதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை கண்டித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மழைக்காலம் முடிந்த பின்னரும் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. எப்போது மழை பெய்தாலும் ஆனைகுட்டம் அணையில் மட்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்படாத நிலை தொடர்கிறது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக சிவகாசி, திருத்தங்கல் மற்றும் அதனைச்சுற்றி உள்ள கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வந்தது. அதே போல் ஆனைகுட்டம் அணைக்கும் தண்ணீர் வந்தது. ஆனால் அணையின் ஷட்டர் பழுதால் தண்ணீர் தேங்காமல் வெளியேறியது. ஷட்டர் பழுதால் தண்ணீர் வீணாவது குறித்து சிவகாசி ஆர்.டி.ஓ. தினகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அணைக்கு வந்து பார்வையிட்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆனைகுட்டம் அணையில் தண்ணீர் தேக்கினால் அந்த பகுதி விவசாயிகள் பயன் பெறுவார்கள். அதனால் அணையில் உள்ள ஷட்டரில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்து தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அணையின் பராமரிப்புக்காக அரசு பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியை வைத்து அணை சீரமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் ஷட்டர் பழுதால் தற்போது தண்ணீர் வீணாகி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story