மேலூர் அருகே: கானை நோய்க்கு 70 பசு மாடுகள் சாவு
மேலூர் அருகே கால்நடைகளை தாக்கும் கானை நோய்க்கு 70 பசு மாடுகள் பலியாகின. மருத்துவ முகாம் நடத்தி கால்நடைகளை காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலூர்,
மேலூர் அருகே மதுரை நான்கு வழிச்சாலையில் முனிக்கோவிலை அடுத்துள்ளது, எஸ்.கல்லம்பட்டி. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மேலும் இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பசு மாடுகள் விற்பனைக்குபெயர் பெற்றதாகவும் எஸ்.கல்லம்பட்டி விளங்குகிறது. இந்தநிலையில் இங்கு கடந்த சில நாட்களாக கானை நோய் பாதித்து பசு மாடுகள் தொடர்ச்சியாக இறந்து வருகின்றன. இதனால் கானை நோய்க்கு மாடுகளை பறிகொடுத்து கிராம மக்கள் பெரும் பாதிப்படைந்து வருவதுடன், கால்நடைகளை எவ்வாறு காப்பாற்றுவது என்ற அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:- கால் நடைகளின் கால் மற்றும் வாயில் தாக்கி புண் ஏற்படுத்தும் கால்வாய் நோய் என்பதே தற்போது கானை நோய். அசைபோடும் கால்நடை களான மாடு மற்றும் ஆடுகளை தற்போது இந்த நோய் தாக்கி வருகின்றது. கால்நடைகளின் கால் கொழம்பு பகுதியில் புண் போன்று ஆரம்பித்து வரும் இந்த நோயால் இறுதியில் ஆடு, மாடுகளே இறந்துபோகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப் பகுதியில் 70 பசு மாடுகள் பலியாகி உள்ளன. ஆடுகளும் பலியாகி வருகின்றன. கடைகளில் மருந்து, மாத்திரைகளை விலைக்கு வாங்கி அதிக செலவு செய்தும் கால்நடைகளை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகிறோம் என்றனர்.
எனவே எஸ்.கல்லம்பட்டியில் கால்நடைகளை காப்பாற்றும் வகையில் உடனடியாக மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்த பசு மாடுகளுக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story