தேனியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு


தேனியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2018 3:00 AM IST (Updated: 21 Oct 2018 10:31 PM IST)
t-max-icont-min-icon

தேனியில், காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. உயிர் நீத்த போலீசார், தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேனி, 

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில், சீனப் படையினர் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக்டோபர் 21-ந் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில் தேனி ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. பணியின்போது உயிர் நீத்தவர்கள் நினைவாக நினைவுத்தூண் அமைக்கப்பட்டு இருந்தது. அலங்கரிக்கப்பட்ட நினைவுத் தூணுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அவரைத் தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் தென்னரசு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிகுமார், சுருளிராஜா மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் மரியாதை செலுத்தப்பட்டது. தேனி மாவட்டத்தில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையில் பணியின்போது 7 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மாவட்ட போலீஸ் துறை சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் அவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு உள்பட அதிகாரிகள் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினர். நிகழ்ச்சியில் போலீசார், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story