கூட்டப்புளியில் மீன்பிடிப்பதில் இருதரப்பினர் மோதல்; 16 பேர் மீது வழக்கு
கூட்டப்புளியில் மீன்பிடிப்பதில் இருதரப்பினர் மோதிக் கொண்டனர். இதுதொடர்பாக 16 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள கூட்டப்புளி கடலோர பகுதிகளில் மீன்பிடித்தல் தொடர்பாக கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட மீனவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று கன்னியாகுமரி, கூட்டப்புளி மீனவர்களிடையே கடலில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் இருதரப்பை சேர்ந்த மீனவர்கள் சிலர் காயமடைந்தனர். மேலும் படகுகள் சேதமடைந்தன.
இதில் கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் கூட்டப்புளியை சேர்ந்த மீனவர்கள் ஆல்வின் (வயது 22), ஜெனி (20), புஸ்கி (35), யீதர் (30) ஆகிய 4 பேரையும், 2 விசைப்படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த கூட்டப்புளி மீனவர்கள் கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்களான மாணிக்கம் (50), சேசு அடிமை (48), துரை (53), டிக்யான்ஸ், ஜெரோம், பாக்கியராஜ், அந்தோணி, செர்வின், சகாய ஸ்டாலின், வர்க்கீஸ், மரியான், ராஜா ஆகிய 12 பேரையும், 2 விசைப்படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.
பின்னர் இருதரப்பு மீனவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் பாதுகாப்பில், கன்னியாகுமரி மீனவர்கள் சிறைபிடித்த 4 பேரை வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜிடமும், கூட்டப்புளி மீனவர்கள் சிறைபிடித்த 12 பேரை கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரனிடமும் ஒப்படைத்தனர்.
மேலும் மீண்டும் மோதல்களில் ஈடுபட கூடாது என இருதரப்பினரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இந்த மோதல் தொடர்பாக கூடங்குளம் கடல் சார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் இருதரப்பை சேர்ந்த மீனவர்கள் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story