சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: ஆறுமுகநேரியில், இந்து மக்கள் கட்சியினர் ரெயில் மறியலுக்கு முயற்சி அர்ஜூன் சம்பத் உள்பட 17 பேர் கைது
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களுக்கு அனுமதி அளித்ததை கண்டித்து ஆறுமுகநேரியில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதை அனுமதித்த கேரள அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அந்த கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 17 பேர் நேற்று காலையில் ஆறுமுகநேரி ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயிலை மறிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திபு, ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் ரெயில் நிலைய நுழைவு வாயில் முன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். பின்னர் கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனையடுத்து போலீசார், அர்ஜூன் சம்பத் உள்பட 17 பேரையும் கைது செய்து, ஆறுமுகநேரியில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் தங்க வைத்தனர்.
முன்னதாக மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
கோர்ட்டு அனுமதி அளித்தது என்று கூறி, கேரள அரசு சபரிமலைக்கு கிறிஸ்தவ பெண்களையும், முஸ்லிம் பெண்களையும் அனுப்பி பிரச்சினை செய்கிறது. கேரள அரசு இதுபோன்ற சதி திட்டங்களை தீட்டி இந்துத்துவா புனிதத்தை கெடுக்க பார்க்கிறது. ஆயிரம் ஆண்டுகளாக உள்ள பாரம்பரிய ஐதீகங்களை ஆராய்ந்து கோர்ட்டு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் கேரள அரசோ மக்களை பிளவுபடுத்த பார்க்கிறது. மதத்தின் பெயரால் கலவரத்தை தூண்ட பார்க்கிறது.
கேரளாவில் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்து வருகிறார்கள். போராட்டம், ஆர்ப்பாட்டம் என செய்து வருகிறார்கள். ஆனால் கேரள அரசு கம்யூனிச கொள்கை கொண்ட சிலரை கோவிலுக்கு அனுப்பி பிரச்சினையை மேலும் வலுபடுத்துகிறது.
கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களையும், சமூக போராளிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களையும் அரசு விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் மாநில பொது செயலாளர் வசந்தகுமார், மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story