தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு, அதனை தொடர்ந்து நடந்த கலவரத்தில் 13 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இது தொடர்பாக சென்னை சி.பி.ஐ. 15 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் தலைமையில் துணை சூப்பிரண்டு ரவி உள்ளிட்ட 16 சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 13-ந் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை சேகரித்து உள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் காயம் அடைந்தவர்களின் விவரங்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் இறந்த 13 பேரின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கையில் சி.பி.ஐ. அதிகாரிகள் இறங்கி உள்ளனர். அதே போன்று வழக்கில் தொடர்புடைய பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவதற்கான தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story