தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிக்கும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிக்கும் என்று காரிமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 47-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் காரிமங்கலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் மகாலிங்கம், பொருளாளர் காவேரி, மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல், மாணவர் அணி ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் காந்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தலைமை கழக பேச்சாளர் வீரபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை அழித்துவிடுவோம் என்று எதிர்கட்சிகள் அறைகூவல் விடுத்து வருகின்றன. இந்த கட்சியை அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள். கட்சியின் உறுப்பினர்களாக 1½ கோடி பேரை சேர்த்து சாதனை படைத்த ஜெயலலிதா இந்த கட்சி 100 ஆண்டுகாலம் நீடிக்க வேண்டும் என்று கூறினார். அவருடைய கொள்கைகள், நோக்கங்களை நிறைவேற்றி வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழகத்தில் நல்லாட்சி புரிந்து வருகிறார்கள். மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். இதை பொறுத்து கொள்ள முடியாமல் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து வருகிறார்கள். மக்கள் இதை நம்ப மாட்டார்கள்.
இந்த ஆட்சி விரைவில் முடிந்துவிடும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். கட்சியை விட்டு 10 ஆண்டுகாலம் நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று எதிர்கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து பொய்யான அறிக்கைகளை விடுத்து வருகிறார். இந்த இயக்கத்தை கைப்பற்றுவேன் என்று சொன்னவர் புதிதாக ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். அவருடைய செயல்பாடுகள் பிடிக்காத கட்சி தொண்டர்களில் பெரும்பாலானோர் மீண்டும் அ.தி.மு.க.விற்கே ஆதரவு தெரிவிக்கிறார்கள். இந்த ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் மாணிக்கம், எம்.ஜி.ஆர்.மன்ற முன்னாள் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வேலுமணி, சிவப்பிரகாசம், பெரியண்ணன், நகர செயலாளர் குருநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story