பந்தலூர் அருகே: அரசுபள்ளி கட்டிட சுவர் இடிந்து விழுந்தது
பந்தலூர் அருகே பலத்த மழைக்கு அரசு பள்ளி கட்டிட சுவர் இடிந்து விழுந்தது.
பந்தலூர்,
பந்தலூர் அருகே உள்ளது பொன்னூர். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பொன்னூர் மட்டுமின்றி பொன்வயல், நாடுகாணி உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் உள்ள கட்டிடங்கள் பழுதாகி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. இதனால் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே பொன்னூர் அரசு பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், பொன்னூர் அரசு பள்ளியில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இது பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, ஏற்கனவே இந்த பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடங்களும் பழுதாகி கிடக்கிறது. தற்போது ஒரு கட்டிடத்தின் சுவரும் இடிந்துவிட்டது. மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மாணவ- மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே பழைய கட்டிடங்களை உடனே சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story