கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்கும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் போலீசாருக்கு, குமாரசாமி உத்தரவு


கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்கும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் போலீசாருக்கு, குமாரசாமி உத்தரவு
x
தினத்தந்தி 21 Oct 2018 10:45 PM GMT (Updated: 21 Oct 2018 7:34 PM GMT)

கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்கும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக போலீஸ் துறை சார்பில் போலீஸ் வீர வணக்க நாள் விழா பெங்களூரு கோரமங்களாவில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி, பணியின்போது உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்தும், போலீஸ் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்தும் வீர வணக்கம் செலுத்தினார். பின்னர் குமாரசாமி பேசியதாவது:-

சிலர் தங்களின் சுயநலத்திற்காக இந்த சமூகத்தை உடைக்க முயற்சி செய்கிறார்கள். அத்தகையவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் போலீசார் பின்வாங்கக்கூடாது. இத்தகைய நடவடிக்கைக்கு மாநில அரசு முழு ஆதரவு வழங்கும். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

போலீஸ் அதிகாரிகள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும். போலீசார் சில பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். ஆயினும் மாநிலத்தை காக்கும் பணியில் கர்நாடக போலீசார் சிறப்பான முறையில் செயல்படுகிறார்கள்.

சிறப்பாக பணியாற்றுவதில் கர்நாடக போலீசார் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளனர். இதற்காக கர்நாடக அரசு சார்பிலும், மக்கள் சார்பிலும் உங்களை பாராட்டுகிறேன். கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்கும் சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது.

போலீசார் என்னிடம் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். போலீஸ் அதிகாரி ராகவேந்திரா அவுராத்கர் வழங்கிய அறிக்கையில் சில திட்டங்கள், போலீசாரின் மேம்பாட்டிற்காக அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை அமல்படுத்த அரசு தயாராக உள்ளது. அதுபற்றி துணை முதல்-மந்திரி பரமேஸ்வருடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன்.

மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டாலும், போலீசாரின் கஷ்டங்களை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும். கடந்த 59 ஆண்டுகளுக்கு முன்பு, சீனா மற்றும் இந்தியா இடையே போர் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர். அவர்களுக்கு கவுரவம் அளிக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

கர்நாடகத்தில் பணியின்போது, 416 போலீசார் மரணம் அடைந்தனர். அவர்களின் உழைப்புக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். மேலும் அவர்களின் குடும்பத்தை காக்கும் பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது. ராணுவத்தினர் நாட்டை காக்கிறார்கள். போலீசார் சட்டத்தை நிலை நாட்டுகிறார்கள். அமைதியை சீர்குலைப்பவர்கள், போதைப்பொருள் கடத்துபவர்கள், சமூக விரோதிகளை போலீசார் அடக்க வேண்டும். சைபர் குற்றங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இதற்கு தேவையான வசதிகளை மாநில அரசு செய்து கொடுக்கும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. நீலமணி ராஜூ மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story