புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் மீன் மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது


புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் மீன் மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
x
தினத்தந்தி 22 Oct 2018 4:00 AM IST (Updated: 22 Oct 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் சென்னையில் உள்ள மீன்மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. அதேபோல ஆடு-கோழி இறைச்சி விற்பனையும் சூடுபிடித்திருக்கிறது.

சென்னை,

விரதத்துக்கு பெயர் போன புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான அசைவ பிரியர்கள் தங்கள் வாய்க்கு பூட்டு போட்டிருந்தனர். இந்தநிலையில் புரட்டாசி மாதம் முடிந்தநிலையில் இறைச்சி உணவை ஒரு ‘பிடி’ பிடித்திட வேண்டும் என்று அசைவ பிரியர்கள் ஆயத்தமாகி விட்டனர். இதன் எதிரொலியாக இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது.

புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் வந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சென்னை மாநகரில் உள்ள மீன் மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வானகரம், சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு, எண்ணூர், புழல் காவாங்கரை, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட முக்கிய மீன் மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி மீன்கள் வரத்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வானகரம் மீன் மார்க்கெட் நிர்வாகி ஏ.துரை கூறியதாவது:-

புகழ்பெற்ற வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி, ராமநாதபுரம், ஏர்வாடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்கோடி தமிழக பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மீன்கள் கொண்டுவரப்படுகின்றன. தினமும் 40 முதல் 60 வண்டிகள் வரையில் சுமார் 250 டன் வரையில் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

புரட்டாசி மாதத்தில் மீன் விற்பனை மிகவும் மோசமடைந்தது. தினமும் 50 டன் மீன்கள் விற்பதே கேள்விக்குறியாக அமைந்தது. தற்போது புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் மீன் விற்பனை மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி கூடுதலாக மீன்களை இறக்குமதி செய்து வருகிறோம்.

வானகரம் மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை நிலவரம் வருமாறு (கிலோவில்):-

சங்கரா - ரூ.120 முதல் ரூ.150 வரை, சீலா - ரூ.150, வஞ்சீரம் (பெரியது) - ரூ.500 வரை, வஞ்சீரம் (சிறியது) - ரூ.350 வரை, வவ்வால் - ரூ.400, பாறை - ரூ.80 முதல் ரூ.100 வரை, நகரை - ரூ.80 முதல் ரூ.100 வரை, காரல் - ரூ.120 முதல் ரூ.150 வரை, நெத்திலி (பெரியது) - ரூ.150 வரை, நெத்திலி (சிறியது) - ரூ.70 வரை, மத்தி - ரூ.40 முதல் ரூ.60 வரை, கவளை - ரூ.50, வாலை - ரூ.150, கிழங்கான் - ரூ.100, நண்டு - ரூ.150 முதல் ரூ.200 வரை, வலை மீன் - ரூ.280, கானாங்காத்தான் - ரூ.60 முதல் ரூ.80 வரை, இறால் - ரூ.200 முதல் ரூ.350 வரை (ரகத்துக்கு ஏற்ப), வளர்ப்பு மீன்களான கட்லா - ரூ.130 முதல் ரூ.150 வரை, ஏரி வவ்வால் (ரூப் சந்த்) - ரூ.150 வரை, ரோகு - ரூ.120.

நகரின் முக்கிய இடங்களில் மொத்த விலையில் மீன்கள் வாங்கும் இரண்டாம் கட்ட வியாபாரிகள் வண்டி வாடகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூ.20 முதல் ரூ.40 வரை மீன்களை கூடுதலாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யவேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மீன்களை போலவே ஆடு-கோழி இறைச்சி விற்பனையும் சூடுபிடித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை ஆட்டிறைச்சி சில்லறை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் அன்வர் பாஷா குரைஷி கூறியதாவது:-

புரட்டாசி மாதம் முடிவடைந்ததையொட்டி ஆடு-கோழி இறைச்சி விற்பனை சூடு பிடித்திருக்கிறது. கடந்த புரட்டாசி மாதத்தில் வழக்கமான விற்பனையில் 30 சதவீதம் கூட நடக்கவில்லை. இந்தநிலையில் மீண்டும் விற்பனை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. சென்னைக்கு ராஜஸ்தான், கொல்கத்தா, கூடூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆடுகள் இறைச்சிக்காக வருகிறது. தற்போது ஆட்டிறைச்சி (கிலோவில்) ரூ.650-க்கு விற்பனை ஆகிறது.

அதேபோல கோழி இறைச்சி விற்பனையும் நன்றாக நடக்கிறது. ஒரு கிலோ கோழிக்கறி (தோலுடன்) ரூ.200-க்கும், உரித்த நிலையில் கோழிக்கறி ரூ.220-க்கும் விற்பனை ஆகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story