போலீஸ் ஏட்டு, டாஸ்மாக் விற்பனையாளரை கத்தியால் வெட்டி ரூ.2 லட்சம் பறிப்பு: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


போலீஸ் ஏட்டு, டாஸ்மாக் விற்பனையாளரை கத்தியால் வெட்டி ரூ.2 லட்சம் பறிப்பு: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Oct 2018 3:00 AM IST (Updated: 22 Oct 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே போலீஸ் ஏட்டு, டாஸ்மாக் விற்பனையாளரை கத்தியால் வெட்டி ரூ.2 லட்சத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மயிலம், 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள ஆலகிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் திருவேங்கடம் (வயது 44). கூட்டேரிப்பட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தினந்தோறும் டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் பணத்தை மயிலம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் ஒருவருடன் பாதுகாப்பாக இரவு வீட்டுக்கு எடுத்து சென்றுவிட்டு, மறுநாள் காலையில் வங்கியில் செலுத்துவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு திருவேங்கடம் கடையில் விற்பனையான தொகை ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு, டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். பணத்தை மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் வைத்திருந்தார். பாதுகாப்புக்காக மயிலம் போலீஸ் ஏட்டு இளையராஜா(48) என்பவர் தனியாக ஒரு மோட்டார் சைக்கிளில் திருவேங்கடத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். இரவு 10.30 மணியளவில் சோழியசொர்குளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென திருவேங்கடத்தின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, பணப்பையை பறிக்க முயன்றனர்.

இதைபார்த்த ஏட்டு இளையராஜா அவர்களை தடுத்து, திருவேங்கடத்தை அங்கிருந்து புறப்பட்டு செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் 2 பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால், இளையராஜாவை வெட்டினர். இதில் அவரது இடது கையில் வெட்டு விழுந்தது. இதையடுத்து அந்த மர்மநபர்கள் திருவேங்கடத்தை விரட்டி சென்று வழிமறித்து, அவரது முகத்தில் கத்தியால் வெட்டினர். இதில் அவர் நிலைகுலைந்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதை அறிந்த மயிலம் போலீசார் விரைந்து வந்து, ரத்த காயங்களுடன் இருந்த போலீஸ் ஏட்டு இளையராஜா, டாஸ்மாக் விற்பனையாளர் திருவேங்கடம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் ஏட்டு, டாஸ்மாக் விற்பனையாளர் ஆகியோரை கத்தியால் வெட்டி ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தை பறித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story