தூர்வாரப்பட்ட வாய்க்கால்களை கவர்னர் கிரண்பெடி ஆய்வு


தூர்வாரப்பட்ட வாய்க்கால்களை கவர்னர் கிரண்பெடி ஆய்வு
x
தினத்தந்தி 22 Oct 2018 4:45 AM IST (Updated: 22 Oct 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

கிராமப் புறங்களில் தூர்வாரப்பட்ட வாய்க்கால்களை கவர்னர் கிரண்பெடி நேற்று ஆய்வு செய்தார்.

பாகூர்,

புதுவை கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் கிராமப் புறங்களுக்கு அதிகாரிகளிடம் சென்று ஆய்வு பணியில் ஈடுபடுவது வழக்கம். சமீப காலமாக வாய்க்கால்கள், ஏரிகள் தூர்வாரும் பணிகளுக்கு கவர்னர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதையொட்டி வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டார்.

புதுவையில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உதவியுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நேற்று காலை அரும்பார்த்தபுரத்தில் உள்ள ஆத்து வாய்க்காலுக்கு கவர்னர் கிரண்பெடி சென்றார். அங்கு நடந்து வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைதொடர்ந்து சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பாகூர் ஏரிக்கும் வரும் பங்காரு வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே வாய்க்கால் தூர்வாரப்பட்டு இருந்ததை பார்த்த கவர்னர், ஏன் முழுமையாக தூர்வாரவில்லை என்று அதிகாரிகளிடம் கேட்டார். இதற்கு அங்கிருந்த ஒப்பந்ததாரர் இன்னும் நிதி வரவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து விரைவில் நிதி ஒதுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கிரண்பெடி உத்தரவிட்டார்.

பின்னர் பாகூரை அடுத்த குருவிநத்தம் சித்தேரி வாய்க்காலை பார்வையிட்டு கவர்னர் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விவசாயிகள், ஏரிகள், வாய்க்கால்களை தூர்வாரியதற்கு நன்றி தெரிவித்து கவர்னருக்கு சால்வை அணிவித்தனர். அவர்களுடன் கவர்னர் கிரண்பெடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, பொதுப்பணித்துறை செயலாளர், தலைமை பொறியாளர் சண்முகசுந்தர், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story