ராஜபாளையம் பகுதியில் 4 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய கண்மாய்கள்
ராஜபாளையம் பகுதியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய்கள் நிரம்பியுள்ளன.
ராஜபாளையம்,
ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து வறட்சி நிலவி வந்தது. கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் இதில் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி விடுபட்டுப்போனது. ஆனால் தற்போது இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சில தினங்களாக பெய்த மழையினால் வறண்டு கிடந்த கண்மாய்களுக்கு நீர்வரத் தொடங்கியது. இந்த தாலுகாவில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 51 கண்மாய் உள்பட 116 கண்மாய்கள் உள்ளன. இவற்றில் 14 கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேறிக்கொண்டு இருக்கிறது.
மருங்கூர், புதுக்குளம், பிரண்டங்குளம், ஆதியூர், புளியங்குளம், கொண்டனேரி, கடம்பங்குளம், பெரியாதிகுளம், கருங்குளம், மேல இலுப்பைகுளம், ஆப்பனேரி, முதுகுடி, வாகைக்குளம் உள்ளிட்ட கண்மாய்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மற்ற கண்மாய்களுக்கும் கணிசமான நீர்வரத்து இருக்கிறது.
ராஜபாளையம் நகரின் குடிநீர் ஆதாரமான 6-வது மைல் நீர்த் தேக்கத்துக்கு அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வருகிறது. இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 22 அடியாகும். இதில் 18 அடி வரை தண்ணீர் சேமிக்கலாம். தற்போது 15 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலை நீடித்தால் விரைவில் முழு அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜபாளையம் பகுதியை வளம் கொழிக்கச்செய்யும் சாஸ்தா கோவில் அணைஏற்கனவே நிரம்பி விட்டது. அதன் உபரி நீர் அந்த பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு வருகிறது. அந்த அணையை உடனடியாக பாசனத்துக்கு திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் கண்மாய்களை தொடர்ந்து கண்காணிக்க வருவாய்த்துறையினருக்கு தாசில்தார் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். பொதுப்பணித்துறையினரும் உஷார் நிலையில் உள்ளனர்.
இதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மழை கொட்டித்தீர்த்தது. பிளவக்கல் அணை நிரம்பிய நிலையில் வினாடிக்கு 420 கன அடி தண்ணீர் வந்து கொன்டு இருக்கிறது. இதில் 400 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் அந்த பகுதிகளில் உள்ள ஓடை வழியாக கண்மாய்களுக்கு செல்கிறது.
இந்த தாலுகாவில் மொத்தம் 153 கண்மாய்கள் உள்ளன. இதில் வாழைக்குளம் கண்மாய் ஏற்கனவே நிரம்பி விட்டது. பெரிய குளம் கண்மாய், அழுத நீராற்று குளம், மறவன்குளம், கமலாகுளம், வராகசமுத்திரம் கண்மாய், மொட்டவத்தான் கண்மாய் உள்பட 66 கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. ஆண்டாள் நீராடியதாக கூறப்படும் திருமுக்குளத்துக்கும் தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் ஆணையாளர் வெள்ளைச்சாமி கூறுகையில், நீர்வரத்து பகுதிகளையும் கண்மாய்களையும் மராமத்து செய்திருந்ததால் தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. கண்மாய்களை வருவாய்த்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மணல் மூடைகள் தயார் நிலையில் உள்ளன. அலுவலர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களும் உஷாராக இருக்க வேண்டும். சுகாதார பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன இவ்வாறு கூறினார்.
தொடர்மழையால் கிணறுகளிலும் ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பணிகளை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.
Related Tags :
Next Story