நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2018 9:30 PM GMT (Updated: 21 Oct 2018 11:02 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதியில் கொட்டி தீர்த்த மழையினால் வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது. இதன் எதிரொலியாக திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி, 


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடி ஆகும். ஆனால் 69 அடி முழு கொள்ளளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக இருந்தது. இதைத்தொடர்ந்து 5 மாவட்ட மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் முல்லைப்பெரியாறு, மூல வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நள்ளிரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் அணைக்கு வருகிற தண்ணீரின் அளவு அதிகரித்தது. நேற்று அதிகாலை 5 மணி அளவில் வைகை அணை யின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. இதையடுத்து 5 மாவட்டங்களுக்கு 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

அதன்படி அணையில் இருந்து பிரதான மதகுகள் வழியாக வினாடிக்கு 4 ஆயிரத்து 260 கன அடி வீதம் ஆற்று வழியாகவும், பாசன கால்வாய் மூலமாகவும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையில், இந்த ஆண்டில் 2-வது முறையாக வைகை அணை நிரம்பி உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 1981-ம் ஆண்டுக்கு பிறகு, ஒரே ஆண்டில் வைகை அணை 2 முறையாக தற்போது தான் நிரம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வைகை அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் அணையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story