பழனி-கொடைக்கானல் இடையே மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறைகள் - போக்குவரத்து பாதிப்பு
பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பழனி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் அடிக்கடி பாறைகள் உருண்டு விழுந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு அருகே பாறை உருண்டு விழுந்தது. நல்லவேளையாக அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் வரவில்லை. இல்லையெனில் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.
இதற்கிடையே பாறைகளும், மண்ணும் மலைப்பாதையில் விழுந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வாகனங்களில் கொடைக்கானலுக்கு சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மலைப்பாதையில் கிடந்த பாறைகள் மற்றும் மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு பாறை மற்றும் மண்ணும் அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
Related Tags :
Next Story