அவினாசி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்


அவினாசி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 22 Oct 2018 1:20 PM GMT)

அவினாசி அருகே குடிநீர், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்பட அடிப்படை வசதிகளை கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் காசிக்கவுண்டன் புதூர், கருணைபாளையம் கொடிக்காத்த குமரன் நகர், வி.பி.கார்டன், பாரதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த பல மாதங்களாக குடிநீர், ஆழ்குழாய் தண்ணீர் எதுவும் கிடைப்பதில்லை.

கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று கூறியும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 10 மணி அளவில் அவினாசி–மங்கலம் சாலையில் ராயன் கோவில் பிரிவு அருகே அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில் ‘‘எங்கள் பகுதியில் கடந்த சில வருடங்களாக 20 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் சொற்ப அளவே கிடைக்கிறது. தெருவில் எந்த மின்விளக்குகளும் எரிவதில்லை, வருடகணக்கில் குப்பைகள் அள்ளப்படாமல் அப்படியே குவிந்து கிடக்கிறது. கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிக அளவில் உள்ளது. குடிநீருக்காக காலை நேரத்தில் குடங்களை எடுத்துக்கொண்டு அவினாசிக்கு சென்றுவரவேண்டிய அவல நிலை உள்ளது.

இதனால் எங்களது அன்றாட வேலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் முறையாக வழங்க வேண்டும் என்று பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் அவர்களால் எந்த பயனும் இல்லை. எனவே தடையின்றி அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் ’’ என்று கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவினாசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்திலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் நீண்ட நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

முடிவில் குடிநீர் வினியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், தெருவிளக்குகள் எரிவதற்கும், கழிவுநீர்கால்வாய்களை தூர்வாரவும் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.


Next Story