தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையத்தின் 5-ம் கட்ட விசாரணை தொடங்கியது பலியானவரின் வீட்டிற்கு சென்று நீதிபதி விவரம் கேட்டறிந்தார்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையத்தின் 5-ம் கட்ட விசாரணை தொடங்கியது பலியானவரின் வீட்டிற்கு சென்று நீதிபதி விவரம் கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 23 Oct 2018 3:45 AM IST (Updated: 22 Oct 2018 11:23 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 5-ம் கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. இந்த சம்பவத்தில் பலியானவரின் வீட்டிற்கு சென்று நீதிபதி விவரம் கேட்டறிந்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பொதுமக்கள் பேரணியாக சென்றனர். அப்போது, நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் 13 பேர் இறந்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையத்தின் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டன. அந்த பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 4 கட்ட விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று 5-வது கட்டமாக விசாரணை நடத்துவதற்காக ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தூத்துக்குடிக்கு வந்தார்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் தெற்கு காலனியை சேர்ந்த பிரான்சிஸ் மகன் ஜஸ்டின் செல்வமிதிஷ் (வயது 29) என்பவர் கடந்த மே மாதம் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு, தடியடியில் காயம் அடைந்து சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார். அதன் பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 15-ந் தேதி திடீரென்று உயிர் இழந்தார். அவரின் வீட்டுக்கு விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் நேற்று காலை 9 மணி அளவில் சென்றார். அங்கு இருந்த அவரின் உறவினர்களிடம் ஜஸ்டின் செல்வமிதிசுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசு நிதியுதவி கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.

அதன் பின்னர் அவர் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார். இதற்காக 44 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் நேற்று ஆஜராவதற்காக சம்மன் வழங்கப்பட்ட 10 பேரில், துப்பாக்கி சூட்டியில் பலியான தமிழரசன் உறவினர்கள் உள்பட 4 பேர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். தனிநபர் ஆணையத்தின் விசாரணை வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.

Next Story