மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு
போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, தென்மண்டல மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் குயிலி நாச்சியார் ஆகியோர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது;-
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணி, ரூபின்ஸ்டன், வில்பிரட், விஜய், ரமேஷ், இசக்கிமுத்து, கோத்தரமுனியன், மாப்பிள்ளையூரணியை சேர்ந்த ஆரோக்கியம் ஆகிய 8 மீனவர்கள் கடந்த 21.8.2018 அன்று தமிழக கடல் எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்து பொய் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு தலா ரூ.60 லட்சம் மற்றும் 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த மீனவர்களை கவனத்தில் கொண்டு சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தோடு தொடர்பு கொண்டு, மீனவர்களை மீட்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தளவாய்புரத்தை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி தாலுகா தளவாய்புரம் கிராமத்தில் சுமார் 487 விவசாயிகளின் 1045 ஏக்கர் நிலத்தை செந்தில் ஆறுமுகம் என்பவர் அப்துல்சுக்கூர் என்பவருக்கு ரூ.1 கோடிக்கு கிரைய ஒப்பந்தம் செய்து ரூ.10 லட்சம் முன்பணமாக வாங்கி உள்ளார். இந்த பத்திர பதிவு அனைத்தும் போலியான ஆவணங்கள் மூலம் தயாரித்து உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் தாலுகாக்களில் தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் அனுமதி பெறாமல் உயர் மின் அழுத்த மின் கம்பங்கள் அமைத்து வருகிறார்கள். விதி மீறல்களில் ஈடுபட்டு வரும் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி பெறாமல் நடப்பட்ட மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.
ஓட்டப்பிடாரம் தாலுகா பட்டினமருதூர் வடக்கு தெருவை சேர்ந்த மஜித் என்பவர் கொடுத்த மனுவில், நான் நாட்டுப்படகு மூலம் தொழில் செய்து வருகிறேன். தற்போது நாட்டுப்படகு சரியான பாடு இல்லாததால் மாற்றுத் தொழிலாக அரசால் ஊக்குவிக்கப்படும் கடல்பாசியை வளர்த்து வந்தேன். இதில் ரூ.3 லட்சம் முதலீடு செய்தேன். இந்த நிலையில் மன்னார் வளைகுடா கடல் உயிர் கோள் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், எனக்கு சொந்தமான ரூ.2 லட்சம் மதிப்புள்ள கடல் பாசியை அள்ளி சென்று விட்டார். எனவே மாவட்ட கலெக்டர் அந்த நபர் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் விசாரணை நடத்திட வேண்டும் என்று கூறி இருந்தார்.
Related Tags :
Next Story