28-ந்தேதி தத்தா பாதத்திற்கு சிறப்பு பூஜை ஸ்ரீராமசேனை தொண்டர்கள் மாலை அணிந்தனர்
வருகிற 28-ந்தேதி தத்தா பாதத்திற்கு சிறப்பு பூஜை நடைபெறுவதையொட்டி நேற்று ஸ்ரீராமசேனை தொண்டர்கள் மாலை அணிந்துகொண்டனர்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு அருகே பாபாபுடன்கிரி மலையில் தத்தா குகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தத்தா பாதம் உள்ளது. இந்த பாதத்திற்கு ஆண்டுதோறும் ஸ்ரீராமசேனை சார்பில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஸ்ரீராமசேனை தொண்டர்கள் மாலை அணிந்து கொள்வது வழக்கம். இது தத்தா மாலை அணிவிப்பு என்று அழைக்கப்படுகிறது. மாலை அணிந்த பக்தர்கள் விரதம் இருந்து குகை கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
அதுபோல் ஸ்ரீராமசேனை சார்பில் இந்த ஆண்டு வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) தத்தா பாதத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை சிக்கமகளூரு காமதேனு கணபதி கோவிலில் ஸ்ரீராமசேனை தொண்டர்கள், மாநில தலைவர் மகேஷ் தலைமையில் தத்தா மாலை அணிந்து கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்துகொண்டனர். இதுபோல் பெங்களூரு, தட்சிணகன்னடா, உடுப்பி உள்பட மாநிலம் முழுவதும் நேற்று ஸ்ரீராமசேனை தொண்டர்கள் தத்தா மாலை அணிந்துகொண்டனர்.
இதுகுறித்து ஸ்ரீராமசேனை மாநில தலைவர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்ரீராமசேனை சார்பில் வருகிற 28-ந்தேதி தத்தா குகைகோவிலில் உள்ள தத்தா பாதத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இதையொட்டி சிக்கமகளூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் ஸ்ரீராமசேனை தொண்டர்கள் இன்று (அதாவது நேற்று) மாலை அணிந்தனர். இதையொட்டி 28-ந்தேதி சிக்கமகளூருவில் பிரமாண்ட ஊர்வலம் நடக்கிறது.
இதில் ஸ்ரீராமசேனை தேசிய தலைவர் பிரமோத் முத்தாலிக், வடமாநிலங்களை சேர்ந்த 20 நாகசாதுக்கள், மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். பின்னர் இந்த ஊர்வலம் பாபாபுடன் கிரி அடிவாரத்தில் நிறைவடைகிறது. அங்கிருந்து பக்தர்கள் வாகனங்களில் பாபாபுடன் கிரி மலைக்கு சென்று தத்தா குகை கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், ஸ்ரீராமசேனையும் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story