‘மீ டூ’-வில் பெண்கள் பொய்யான புகார்களை கூற மாட்டார்கள் நடிகை ராகிணி திவேதி சொல்கிறார்


‘மீ டூ’-வில் பெண்கள் பொய்யான புகார்களை கூற மாட்டார்கள் நடிகை ராகிணி திவேதி சொல்கிறார்
x
தினத்தந்தி 22 Oct 2018 11:00 PM GMT (Updated: 22 Oct 2018 6:44 PM GMT)

‘மீ டூ’-வில் பெண்கள் பொய்யான புகார்களை கூற மாட்டார்கள் என்று நடிகை ராகிணி திவேதி கூறினார்.

மங்களூரு,

திரைப்பட நடிகை ராகிணி திவேதி நேற்று முன்தினம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள மங்களாதேவி கோவிலுக்கு வந்தார். கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் மேற்கொண்ட அவர், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை ‘மீ டூ’-வில் பதிவிட்டு வருகிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான். உண்மை இல்லாமல் பொய்யான புகார்களை அவர்கள் கூறமாட்டார்கள். அதனால் ‘மீ டூ’ விவகாரத்தில் சிக்கும் நபர்களை போலீசார் கைது செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதற்கான வழிவகைகளை போலீசார் செய்ய வேண்டும். ‘மீ டூ’ மூலம் தங்களுடைய குமுறல்களை வெளிப்படுத்திய அனைத்து பெண்களுக்கும் எனது ஆதரவு உண்டு.

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அனைவரும் மதித்து பின்பற்ற வேண்டும். அதைவிடுத்து கோவிலுக்கு செல்லும் பெண்களை தடுப்பதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் சரியல்ல. கடவுளுக்கு முன் ஆண், பெண் அனைவரும் சமம். கோவிலில் பூஜைகளை ஆண்கள் மட்டும்தான் செய்ய வேண்டும், பெண்கள் செய்யக்கூடாது என்று சட்டம் இல்லை. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் எழுதி வைக்கவும் இல்லை.

எப்போது கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்பது பெண்களுக்கு தெரியும். அதை பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப விட்டுவிட வேண்டும். அதைவிடுத்து அவர்களை கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று கூறி தடுப்பது தவறு. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாகரீக காலத்திற்கு ஏற்ப அனைவரும் மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story