புதருக்குள் இருப்பது விலங்கு என நினைத்து தவறுதலாக துப்பாக்கியால் சுட்டு வாலிபரை கொன்ற வியாபாரி


புதருக்குள் இருப்பது விலங்கு என நினைத்து தவறுதலாக துப்பாக்கியால் சுட்டு வாலிபரை கொன்ற வியாபாரி
x
தினத்தந்தி 23 Oct 2018 4:00 AM IST (Updated: 23 Oct 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

மடிகேரி தாலுகாவில், புதருக்குள் இருப்பது விலங்கு என நினைத்து தவறுதலாக வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வியாபாரி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

குடகு,

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா காண்டனகொள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்(வயது 26). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ். வியாபாரி. நேற்று முன்தினம் ரஞ்சித், தினேஷ் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் வேட்டையாட சென்றனர். இதில் தினேஷ் வேட்டையாடுவதற்காக தனது துப்பாக்கியையும் எடுத்துச் சென்றுள்ளார்.

வனப்பகுதிக்கு சென்றவுடன் அவர்கள் தனித்தனியாக பிரிந்து சென்று வேட்டையாட முயன்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு புதரில் ஏதோ சத்தம் வருவதைக் கேட்டு அது விலங்குதான் என நினைத்து தினேஷ் தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்டவுடன் அந்த புதருக்குள் இருந்து ஒரு ஆண் நபர் வலியால் துடிதுடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ், அவருடன் வந்த மற்ற இளைஞர்களும் அங்கு ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு குண்டு பாய்ந்து ரஞ்சித் இறந்து கிடந்தார். அப்போதுதான் புதருக்குள் இருந்தது விலங்கல்ல என்பதும், ரஞ்சித்தான் அங்கு மறைந்திருந்தார் என்பதும் அவர்களுக்கு தெரியவந்தது. விலங்கு என நினைத்து தவறுதலாக தினேஷ் துப்பாக்கியால் சுட்டு ரஞ்சித்தை கொன்றுவிட்டதும் தெரியவந்தது. இதனால் பதற்றம் அடைந்த தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தினேசை வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story