முதுகுளத்தூர் அருகே கண்மாயில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு
முதுகுளத்தூர் அருகே கண்மாயில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் பகுதியில் உள்ள கண்மாயில் குழந்தை அழும் குரல் கேட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியாக சென்ற சிறுவன் கண்மாயில் குழந்தை சகதிக்குள் கிடப்பதை கண்டு ஓடிச்சென்று கோழிக்கடை நடத்திவரும் கோபால்தாஸ் என்பவரிடம் கூறியுள்ளான். இதனை தொடர்ந்து அவர் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது கண்மாய் பகுதியில் சகதிக்குள் பிறந்து ஒருநாள் ஆன பச்சிளம் அழகிய பெண் குழந்தை அழுதபடி கிடந்தது.
கண், மூக்கு போன்ற பகுதிகள் தவிர உடல் முழுவதும் சகதியாக இருந்தது. கால் உள்ளிட்ட சில இடங்களில் லேசான காயம் இருந்தது. ஒரு நாள் முழுவதும் சகதிக்குள் மழைசாரல் உள்ளிட்டவைகளில் பசியுடன் கதறி அழுததில் பச்சிளங்குழந்தை சோர்வடைந்திருந்தது. இதனை தொடர்ந்து கோபால்தாஸ் குழந்தையை மீட்டு போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக ஆம்புலன்சு மூலம் பச்சிளங்குழந்தை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. குழந்தைகள் சிகிச்சை நிபுணர் டாக்டர் நவநீதன் பச்சிளங்குழந்தையை பரிசோதித்து உடனடியாக சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய குழந்தை அங்கிருந்து குழந்தைகள் சிறப்பு சிகிச்சை வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த குழந்தை யாருடையது, பெற்றோர் யார், எதற்காக கண்மாயில் குழந்தையை போட்டு சென்றனர் என்பது போன்ற விபரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கண்மாயில் சகதிக்குள் பச்சிளங்குழந்தை கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.