மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை
மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நெல்லை மாவட்ட கலெக் டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
நெல்லை மாவட்ட பீடி தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் ராஜாங்கம் தலைமையில், நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் பீடி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
கீழப்பாவூர் அருகே உள்ள ஆவுடையானூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “ஆவுடையானூரில் இருந்து திப்பணம்பட்டி வழியாக செல்லும் கிராமப்புற நெஞ்சாலையில் 3 அடி ஆழத்தில் பள்ளம் உள்ளது. மழை வெள்ளத்தால் அந்த பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளது. அந்த பள்ளத்தில் கடந்த ஒரு மாத காலமாக மழை நீர் தேங்கி உள்ளது. மார்க்கெட் செல்லும் வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தேங்கி நிற்கும் தண்ணீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும். சாலையை சீரமைத்து பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “நெல்லை ராமையன்பட்டி முதல் சங்கரன்கோவில் வரை குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு உள்ளதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தரமற்ற குழாய்களை பதிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. அதை அதிகாரிகள் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.
அம்பை தாலுகா ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செங்கானூரை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சீருடையுடன் வந்து இருந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “எங்கள் ஊர் பகுதியில் ஒரு ரெயில்வே கேட் இருந்தது. அதை அகற்றி விட்டு தரை வழிப்பாலம் அமைத்தார்கள். தற்போது பாலத்தின் வேலை முடியவில்லை. மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில் எந்த பொருட்களும் வாங்க முடியவில்லை. சுற்றுவட்டார விவசாயிகள் எங்கள் ஊருக்கு வர முடியாத நிலை இருக்கிறது. நெல் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அந்த பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து தர வேண்டும். பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.
ராஜ்ய மக்கள் கட்சியின் தலைவர் எம்.சி.கார்த்திக் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், நெல்லை டவுன் 55-வது வார்டு பகுதியில் உள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் சுமார் 250 வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் ஒரு தனியார் செல்போன் நிறுவனம் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. செல்போன் கோபுரம் அமைத்தால் அதன் கதிர்வீச்சினால் அந்த பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த செல்போன் கோபுரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட பொறுப்பாளர் பாண்டியன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர், புளியங்குடி நகரசபையில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், ஆக்கிரமிப்பு அமைப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். அங்கு பாதுகாப்பு நின்று போலீசார், அவரிடம் கோரிக்கை மனுவை மட்டும் வாங்கி அனுப்பி வைத்தனர்.
தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையை அடுத்த அய்யாபுரம் கிராம மக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரில் உள்ள ரேஷன் கடை இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்த கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story