கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது


கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது
x
தினத்தந்தி 23 Oct 2018 3:45 AM IST (Updated: 23 Oct 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி நேற்று தொடங்கியது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு தென்னக மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

2 அணு உலைகளும் அவ்வப்போது பழுது மற்றும் பராமரிப்பு காரணமாக நிறுத்துவதும் பின்பு இயக்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி 2-வது அணு உலையின் ஜெனரேட்டர் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து நேற்று அதிகாலையில் 2-வது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 360 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருவதாகவும் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடையும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது.

முதலாவது அணு உலை கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story