ஜனநாயகத்தில் நாடாளுமன்ற நடைமுறை பற்றி ஸ்ரீராமுலுவுக்கு எதுவும் தெரியாது, சித்தராமையா கடும் தாக்கு


ஜனநாயகத்தில் நாடாளுமன்ற நடைமுறை பற்றி ஸ்ரீராமுலுவுக்கு எதுவும் தெரியாது, சித்தராமையா கடும் தாக்கு
x
தினத்தந்தி 23 Oct 2018 5:15 AM IST (Updated: 23 Oct 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

ஜனநாயகத்தில் நாடாளுமன்ற நடைமுறை பற்றி பா.ஜனதாவை சேர்ந்த ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.வுக்கு எதுவும் தெரியாது என்று தேர்தல் பிரசாரத்தில் சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.

பெங்களூரு,

பல்லாரி நாடாளுமன்ற தொகுதி உள்பட 5 தொகுதிகளுக்கு வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பல்லாரியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

“காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா உள்ளூர்காரர் கிடையாது, வெளியூரை சேர்ந்தவர் என்று ஸ்ரீராமுலு சொல்கிறார். அவர் சட்டமன்ற தேர்தலில் பாதாமி தொகுதியில் எனக்கு எதிராக போட்டியிட்டார். அப்போது அவர் என்ன பாதாமியில் பிறந்திருந்தாரா?. முலகால்மூரு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், அந்த ஊரில் பிறந்தவரா?.

ஸ்ரீராமுலு பிறந்து கண் திறந்து பார்க்கும் முன்பே, உக்ரப்பா அரசியலில் காலடி எடுத்து வைத்துவிட்டார். உக்ரப்பா நாடாளுமன்றத்திற்கு சென்றால், அங்கு பல்லாரி பிரச்சினைகளை எடுத்து பேசுவார். பா.ஜனதா வேட்பாளர் சாந்தா வெற்றி பெற்றால், பல்லாரிக்கு எந்த பயனும் ஏற்படாது. ஜனநாயகத்தில் நாடாளுமன்ற நடைமுறை பற்றி பா.ஜனதாவை சேர்ந்த ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.வுக்கு எதுவும் தெரியாது. பணம் மற்றும் அகங்காரம் மூலம் அவர் அரசியல் செய்கிறார்.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஒரு நாள் கூட அவர் நாடாளுமன்றத்தில் பேசியது இல்லை. கன்னட மொழியே சரியான முறையில் உச்சரித்து பேச தெரியாத அவருக்கு, என்ன பேச வரும்?. இந்த மாநிலம், தேசம் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் நாடாளுமன்றத்திற்கு எதற்காக செல்ல வேண்டும்?. மத்தியில் பா.ஜனதா அரசு உள்ளது. ஸ்ரீராமுலு எம்.பி.யாக இருந்தபோது, ஏதாவது ஒரு திட்டமாவது பல்லாரிக்கு கொண்டு வந்தாரா?. அதனால் காங்கிரஸ் வேட்பாளரை இந்த தொகுதி மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.” இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Next Story