எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதற்காக மோடியை சந்திக்கிறார்கள்


எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதற்காக மோடியை சந்திக்கிறார்கள்
x
தினத்தந்தி 23 Oct 2018 4:30 AM IST (Updated: 23 Oct 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதற்காக மோடியை சந்திக்கிறார்கள் என துரைமுருகன் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமியின் 99-வது பிறந்தநாள் விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் சோழராஜன் தலைமை தாங்கினார். துரை.பாஸ்கரன் வரவேற்றார்.

முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், மதிவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., தி.மு.க. பேச்சாளர் ஈசனகுடி இளங்கோவன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் தென்னவன், தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க. ஆட்சி கால திட்டங்களை கெடுத்து வைத்திருக்கிறார்கள். இணையதள டெண்டர் முறையில் வீட்டில் இருந்து யார் வேண்டுமானாலும் டெண்டரை அனுப்பி வைக்கலாம். அதுபோல் யாராவது ஒருவர் டெண்டர் கேட்டிருக்கிறார்களா? அப்படி ஒருவரை அ.தி.மு.க.வினரால் காட்ட முடியுமா?

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி கடன் பெற்று வட்டி கட்டி கொண்டிருக்கிறார்கள். இந்த திட்டத்தில் 2016-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இன்று வரை பணிகள் குறித்து ஒப்பந்தம் முடிவாகவில்லை.

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதற்காகவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்திக்கின்றனர். ஆனால் இருவருமே கெட்டவர்கள் என மோடி கூறி வருகிறார். அ.தி.மு.கவை தவிர மற்ற அனைத்து கட்சியினரும் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்க தயாராக உள்ளனர்.

அகில இந்திய கட்சிகள் அனைத்தும் மு.க.ஸ்டாலின் என்ன சொல்கிறார்? என்பதை உற்று கவனித்து வருகிறார்கள். ஒரு காலத்தில் யார் ஜனாதிபதி? யார் பிரதமர்? என கருணாநிதி முடிவு செய்தாரோ, அதே காலம் மீண்டும் வந்துவிட்டது. மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டும், நபர் தான் இந்திய நாட்டின் பிரதமர், இந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருப்பார்கள். இன்றைக்கு தேர்தல் வந்தாலும் மு.க.ஸ்டாலின் தான் முதல்-அமைச்சராவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலை துறையில் விட்ட டெண்டரில் நான் ஒரு தவறு செய்து இருந்திருந்தால், தி.மு.க. முதன்மை செயலாளர் பதவியை நாளைக்கே ராஜினாமா செய்கிறேன். என் மீது இப்படி ஒரு அவதூறை பரப்பி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்வேன்.

தி.மு.க.வில் உயர்ந்த பதவியில் இருப்பதால் தான் அமைதி காத்து வருகிறேன். ஊழல் செய்துவிட்டு யார் உள்ளே இருக்கிறார்கள்? ஜெயலலிதா டான்சி ஊழலை ஒத்துக்கொண்டு நிலத்தை திருப்பி கொடுத்தார். சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி ஊழல் வழக்கு என பல ஊழல் வழக்குகளை சந்தித்த அ.தி.மு.க., தி.மு.க.வினர் தான் ஊழல் செய்தவர்கள் என கூற கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் நகர செயலாளர் வீரா.கணேசன் நன்றி கூறினார். 

Next Story