ரவுடி கொலையில் ஒருவர் சிக்கினார்; கார், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


ரவுடி கொலையில் ஒருவர் சிக்கினார்; கார், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Oct 2018 10:30 PM GMT (Updated: 22 Oct 2018 11:29 PM GMT)

மதுரையில் ஓட, ஓட விரட்டி ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கார் மோட்டார் சைக்கிள்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை, 

மதுரை பைக்காரா பகுதியை சேர்ந்தவர் கமல் கருப்பு என்ற கருப்பையா(வயது 32). ரவுடியான இவர் நேற்று முன்தினம் பைபாஸ் ரோடு கொன்னவாயன் சாலையில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து காரில் சென்றார். மதுரை-திண்டுக்கல் பைபாஸ் சாலை வைகை ஆற்றின் சர்வீஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் கமல் கருப்பை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. அதன்பின்பு அந்த கும்பல் கமல் கருப்புவின் காரை எடுத்து கொண்டு தப்பி சென்றது. இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ரவுடி பிள்ளையார் கணேசனின் தாய்மாமா நேருபாண்டியும், அவரது கூட்டாளி விக்னேசையும் சிலர் கொலை செய்தனர். இந்த கொலையை கமல்கருப்பு பணம் வாங்கி கொண்டு செய்தது தெரியவந்தது. எனவே பிள்ளையார் கணேசனின் கூட்டாளிகள் கமல்கருப்புவை கொலை செய்ய திட்டமிட்டனர். இந்தநிலையில் ரவுடி தமிழ்செல்வம் என்பவரின் திருமணத்திற்கு கமல் கருப்பு வருவது பிள்ளையார் கணேசனின் கூட்டாளிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து பிள்ளையார் கணேசனின் தம்பி பிரபு, சுட்டி முனீஸ்வரன், நரி விக்னேஷ், சபேர் அலி உள்பட 10 பேர் சேர்ந்து கமல் கருப்புவை பழிக்குப்பழியாக கொலை செய்தது தெரியவந்தது.

இந்தநிலையில் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டி மலைப்பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரிடம் ஒருவர் மட்டும் சிக்கி கொள்ள, மற்றவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். பிடிபட்டவரிடம் விசாரித்த போது அவரது பெயர் சபேர்அலி என்பதும், மதுரையில் ரவுடி கமல் கருப்பை கொலை செய்துவிட்டு அங்கு பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. சபேர் அலியை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து கார், 2 மோட்டார் சைக்கிள்கள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story