கூடலூர் அருகே: பள்ளி பஸ் கவிழ்ந்து 27 மாணவர்கள் காயம்: மற்றொரு வேன் முந்தி செல்ல முயன்றபோது விபத்து


கூடலூர் அருகே: பள்ளி பஸ் கவிழ்ந்து 27 மாணவர்கள் காயம்: மற்றொரு வேன் முந்தி செல்ல முயன்றபோது விபத்து
x
தினத்தந்தி 24 Oct 2018 3:00 AM IST (Updated: 24 Oct 2018 6:01 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தனியார் பள்ளி பஸ்சை மற்றொரு பள்ளி வேன் முந்தி செல்ல முயன்றபோது சாலையில் பஸ் கவிழ்ந்ததில் 27 மாணவர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கூடலூர், 


கம்பத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கூடலூர், லோயர்கேம்ப் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் பள்ளி பஸ், வேன்களில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் கூடலூரில் இருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு கம்பத்தை நோக்கி தனியார் பள்ளி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை கம்பத்தை சேர்ந்த காசிராஜன் என்பவர் ஓட்டினார். அந்த பஸ்சில் 27 மாணவ-மாணவிகள் இருந்தனர். இதேபோல் மற்றொரு தனியார் பள்ளி வேன் மாணவர்களை ஏற்றி கொண்டு பின்னால் சென்று கொண்டிருந்தது. அந்த வேனை க.புதுப்பட்டியை சேர்ந்த பகவதிராஜ் என்பவர் ஓட்டினார்.

கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் செல்வபுரம் விலக்கு என்னுமிடத்தில் அந்த பள்ளி பஸ்சை, பின்னால் வந்த பள்ளி வேன் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளி பஸ் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. பள்ளி வேனும் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது.

பள்ளி பஸ், வேன் ஆகியவற்றில் இருந்த மாணவர்கள் அய்யோ, அம்மா என்று அலறி கூச்சலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கவிழ்ந்து கிடந்த பஸ்சில் இருந்த மாணவர்களை மீட்டனர். இதில் 27 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை மற்றொரு பள்ளி வேன் மூலம் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த 1-ம் வகுப்பு படிக்கும் மோனிசு (வயது 5) என்ற மாணவன் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலையோர பள்ளத்தில் இறங்கிய பள்ளி வேனில் இருந்த மாணவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அந்த பகுதிக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி, உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாராயணசாமி, போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

இந்த விபத்து குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர்கள் காசிராஜன், பகவதிராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story