விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2018 10:15 PM GMT (Updated: 23 Oct 2018 6:26 PM GMT)

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்,

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பிரதாப்சந்திரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் மாரியப்பன், ஏ.ஐ.டி.யு.சி. திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் கஜேந்திரன், நிர்வாகிகள் மயில்வாகனன், பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டு விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தீபாவளி கருணைத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், குறைந்தபட்ச தினசரி ஊதியமாக ரூ.500 வழங்க வேண்டும், வேலை உறுதியளிப்பு திட்டத்தை பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்தும் வகையில் மத்திய சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி ஏழை எளிய மக்கள் பல்லாண்டு காலமாக குடியிருந்து வரும் இடங்களில் இருந்து அப்புறப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என்பது போன்ற 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் மதியழகன் நன்றி கூறினார்.

Next Story