நடைபயணத்தில் ஈடுபட முயன்ற தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் கைது


நடைபயணத்தில் ஈடுபட முயன்ற தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் கைது
x
தினத்தந்தி 24 Oct 2018 4:30 AM IST (Updated: 24 Oct 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

நடைபயணத்தில் ஈடுபட முயன்ற தனியார் தொழிற்சாலை தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள ராயல் என்பீல்ட் இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் யமஹா தொழிற்சாலை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வேலைநிறுத்தத்திற்கு தீர்வு காணவும் தொழிற்சங்க உரிமைகளை உறுதிசெய்து தொழிலாளர் துறை வழங்கிய அறிவுரையை நிறுவனங்கள் அமல்படுத்த மாவட்ட கலெக்டர் தலையிடவேண்டும் என்று ஒரகடத்தில் இருந்து காஞ்சீபுரம் வரை நடைபயணம் மேற்கொள்ள தொழிற்சங்கத்தின் சார்பில் ஒரகடம் போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ளதால் நடைபயணத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று காலை ராயல் என்பீல்ட் மற்றும் யமஹா தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 1500-க்கும் மேற்பட்டோர் ஒரகடத்தில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள திரண்டிருந்தனர். இந்த நடைபயணத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் ஆதரவு அளித்திருந்தது. இதனையடுத்து அங்கு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக இந்த நடை பயணத்தை தொடங்கி வைக்க சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.

அப்போது காவல்துறை அதிகாரிகள் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன், உழைக்கும் மக்கள் மாமன்ற தலைவர் குசேலர் ஆகியோரிடம் நடைபயணம் மேற்கொள்வதால் போக்குவரத்து இடையூறு மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது என்று எடுத்து கூறினர்.

இதனையடுத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களின் நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் பேசிய சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் நடைபயணத்தை தொடங்கிவைத்தார். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நடைபயணத்தில் ஈடுபட முயன்ற சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள், தொழிலாளர்கள் 44 பெண்கள் உள்பட 1,500 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் வல்லக்கோட்டையில் உள்ள 4 தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் பேசிய சீமான் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும். துறை சார்ந்த அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் என கூறினார். கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

Next Story