மகளை கொன்று வி‌ஷம் குடித்த தாய் சிகிச்சை பலனின்றி சாவு; காவலாளி மீது வழக்கு


மகளை கொன்று வி‌ஷம் குடித்த தாய் சிகிச்சை பலனின்றி சாவு; காவலாளி மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Oct 2018 3:45 AM IST (Updated: 24 Oct 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

மகளை கொன்று வி‌ஷம் குடித்த தாய் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக காவலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பெருந்துறை,

பெருந்துறை அருகே உள்ள சிலேட்டர் நகரை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 50). இவர் சீனாபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி திலகவதி (45). தையல் தொழிலாளி. இவர்களுக்கு பிரவேஷ் ராஜா (10), சுரக்ஷா (7) என 2 குழந்தைகள் உள்ளனர். பிரவேஷ் ராஜா அந்தப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 5–ம் வகுப்பும், சுரக்ஷா 2–ம் வகுப்பு படித்து வந்தனர். சம்பவத்தன்று ராபர்ட்டுக்கும், அவருடைய மனைவி திலகவதிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ராபர்ட், திலகவதியை தாக்கியதால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்தார்.

இதைத்தொடர்ந்து திலகவதி வீட்டில் இருந்து எலி மருந்தை (வி‌ஷம்) எடுத்து உணவில் கலந்தார். பின்னர் அந்த உணவை தன்னுடைய குழந்தைகளான சுரக்ஷா மற்றும் பிரவேஷ்ராஜா ஆகியோருக்கு கொடுத்தார். மேலும் திலகவதியும் வி‌ஷத்தை குடித்தார். இதனால் அவர்கள் 3 பேரும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தனர்.

இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி சுரக்ஷா பரிதாபமாக இறந்தாள்.

திலகவதி மற்றும் அவருடைய மகன் பிரவேஷ் ராஜா ஆகியோருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் திலகதிவும் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆபத்தான நிலையில் பிரவேஷ் ராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ராபர்ட் மீது பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story