கோவில்பட்டியில் 4 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை: போக்குவரத்து தொடங்கி சாதனை


கோவில்பட்டியில் 4 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை: போக்குவரத்து தொடங்கி சாதனை
x
தினத்தந்தி 24 Oct 2018 3:00 AM IST (Updated: 24 Oct 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நேற்று 4 மணி நேரத்தில் ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்கப்பட்டு, ரெயில் போக்குவரத்து தொடங்கி சாதனை படைக்கப்பட்டது.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி மில் அருகில் ரெயில்வே கேட் உள்ளது. இதன் அருகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. பின்னர் ரெயில்வே கேட்டை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ரெயில்வே கேட் அருகில் உள்ள இந்திரா நகர், அத்தைகொண்டான், சீனிவாச நகர், சாந்தி நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரெயில்வே கேட்டை அகற்றினால், தங்களது பகுதிக்கு பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்லும் நிலை ஏற்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த ரெயில்வே கேட்டில் இருந்து சிறிது தூரத்தில் லட்சுமி மில் பிள்ளையார் கோவில் அருகில் ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேற்று காலையில் அந்த இடத்தில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் இருபுறமும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

மதியம் 12.40 மணிக்கு திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. தொடர்ந்து சுரங்க வழிப்பாதை அமையவுள்ள இடத்தில் தண்டவாளத்தை துண்டித்து அகற்றினர். மதியம் 1 மணிக்கு அந்த இடத்திலும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் துரிதமாக பள்ளம் தோண்டப்பட்டது.

தொடர்ந்து ராட்சத காங்கிரீட் தூண்களை கிரேன்கள் மூலம் தூக்கி, பள்ளத்தில் இறக்கி, சுரங்க வழிப்பாதை அமைத்தனர். பின்னர் அதன் மீது ரெயில்வே தண்டவாளங்களை மீண்டும் பொருத்தினர். இந்த பணி சுமார் 5 மணிக்கு முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு தயாரானது.

தொடர்ந்து திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 5 மணிக்கு புதிதாக அமைக்கப்பட்ட ரெயில்வே சுரங்க வழிப்பாதை மேலே சென்று கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு வந்தது. ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்கும் பணியை முன்னிட்டு, இந்த ரெயில் சுமார் 1.45 மணி நேரம் தாமதமாக கோவில்பட்டிக்கு வந்தது. சுரங்கப்பாதை வழியாக வாகன போக்குவரத்து ஓரிரு நாளில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கோவில்பட்டியில் 4 மணி நேரத்தில் ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்கும் பணியை ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் செய்து முடித்து சாதனை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story