விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? போலீசாருக்கு, டாக்டர்கள் விளக்கம்


விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? போலீசாருக்கு, டாக்டர்கள் விளக்கம்
x
தினத்தந்தி 24 Oct 2018 4:30 AM IST (Updated: 24 Oct 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்து போலீசாருக்கு டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.

நாகர்கோவில்,

சாலை விபத்து, மின்சார விபத்து, நீரில் மூழ்குதல் போன்ற சம்பவங்களால் பாதிப்புக்குள்ளாகும் நபர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது பற்றிய பயிற்சி முகாம் நேற்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடந்தது.

அரசு மருத்துவக்கல்லூரியின் மயக்கவியல் துறை சார்பில் நடந்த இந்த பயிற்சி முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விபத்து உள்ளிட்ட எந்த சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அந்த இடத்துக்கு போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் தான் முதலில் சம்பவ இடத்துக்கு செல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் சிக்கி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க போலீசாருக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. எனவே போலீசார் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.

அரசு மருத்துவக்கல்லூரி டீன் பாலசுப்பிரமணியன் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து விளக்கமளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சாலை விபத்து, மின் விபத்து போன்றவற்றில் சிக்கி கொள்பவர்கள் நினைவிழந்த நிலையில் கிடக்க வாய்ப்புண்டு. அந்த மாதிரியான நேரங்களில் சம்பவ இடங்களுக்கு செல்லும் போலீசார் இதயம் உள்ள பகுதியை முறையாக அழுத்தினால் இதயமும், நுரையீரலும் மீண்டும் செயல்பட தொடங்கும். அதன் பிறகு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தால் பல உயிரிழப்புகளை தடுக்கலாம்.

அதற்காக தான் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் இந்த பயிற்சி முகாமை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு டீன் பாலசுப்பிரமணியன் பேசினார்.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியர்கள், பயிற்சி டாக்டர்கள் மனித உருவம் போன்ற பொம்மையை பயன்படுத்தி நின்று போன இதயம் மற்றும் நுரையீரலை மீண்டும் செயல்பட செய்ய மனிதனின் நெஞ்சு பகுதியில் எவ்வாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று செயல்விளக்கம் அளித்தனர்.

பயிற்சி முகாமில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி துணை சூப்பிரண்டு டாக்டர் கண்ணன், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவ அதிகாரி ரெனிமோள் மற்றும் மயக்கவியல் துறை பேராசிரியர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

இதே போன்று மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் நேற்று மயக்கவியல் துறை சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.

Next Story