தூத்துக்குடி மாநகராட்சியில் “கொசுப்புழு இல்லாத இல்லம்” சான்று வழங்கும் திட்டம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாநகராட்சியில் “கொசுப்புழு இல்லாத இல்லம்” சான்று வழங்கும் திட்டத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்கும் விதமாக, உற்பத்தியாக காரணமாக உள்ள காரணிகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகராட்சி சார்பில், வீடுகள் தோறும் டெங்கு கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கண்காணித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொசுப்புழு உற்பத்தியாவதற்கான காரணிகள் இருந்தால், அதனை அகற்றி மருந்துகளும் தெளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொசுப்புழுக்கள் இல்லாத வீடுகள் மற்றும் பொதுசுகாதார விதிமுறைகளை பின்பற்றும் மக்களை பாராட்டும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி 46-வது வார்டு பங்களா தெரு பகுதியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் ஆகியோர் நேற்று காலை டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கொசுப்புழு இல்லாத வீடுகளில் மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட கொசுப்புழுக்கள் இல்லாத இல்லம் சான்று ஒட்டும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். இது குறித்து ஆணையாளர் கூறியதாவது:- மாநகராட்சி பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடும் வாரம் ஒரு முறை கள ஆய்வு செய்யப்படும். தொடர்ச்சியாக 4 வாரங்கள் கொசுப்புழுக்கள் மற்றும் காரணிகள் ஏதும் காணப்படாத பட்சத்தில் கொசுப்புழுக்கள் இல்லா இல்லம் சான்று ஸ்டிக்கர் சம்பந்தப்பட்ட வீட்டில் ஒட்டப்படும்.
தொடர்ச்சியாக கொசுப்புழுக்கள் இல்லாத நிலையில் பாராட்டு சான்று வழங்கி ஊக்குவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாநகர நல அலுவலர் வினோத்ராஜா, சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் மற்றும் பொது சுகாதார பிரிவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story