மதுக்கரையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகரிப்பு; மலையடிவாரத்தில் கால்நடைகளை மேய்க்க வேண்டாம் என அறிவுரை


மதுக்கரையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகரிப்பு; மலையடிவாரத்தில் கால்நடைகளை மேய்க்க வேண்டாம் என அறிவுரை
x
தினத்தந்தி 24 Oct 2018 4:15 AM IST (Updated: 24 Oct 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கரையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே மலையடிவாரத்தில் கால்நடைகளை மேய்க்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

கோவை,

கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, கழுதைப்புலி, யானை, காட்டெருமை, செந்நாய், மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

இதில் கோவை வனச்சரகத்தை தவிர மற்ற அனைத்து வனச்சரக பகுதியிலும் புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மதுக்கரை வனச்சரக பகுதியில் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

குறிப்பாக மதுக்கரை காந்திநகர் துப்பாக்கி சுடும் தளம் அருகில் உள்ள பாறைகளின் மேல் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைப்புலிகள் இருப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 குட்டிகளுடன் ஒரு சிறுத்தைப்புலி இருந்தது.

ஒரு வாரத்துக்கு முன்பு அதே இடத்தில் 2 சிறுத்தைப்புலிகள் விளையாடி கொண்டு இருந்தன. தற்போது மீண்டும் அதே பகுதியில் ஒரு சிறுத்தைப்புலி இருந்ததை அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து உள்ளனர். இதனால் அங்குள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தான் மதுக்கரை வனப்பகுதியில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. வனப்பகுதிக்குள் சென்றாலே அங்குள்ள பாறைகளில் சிறுத்தைப்புலிகள் படுத்து இருப்பதை காண முடிகிறது. இவை இந்த வனப்பகுதியில் உள்ளதா? அல்லது கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்ததா? என்பது தெரியவில்லை.

ஆனால் அவைகளால் பொதுமக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. இதுவரை வனப்பகுதியை விட்டு வெளியே வந்து யாரையும் கடித்ததாகவோ அல்லது எந்த கால்நடைகளை அடித்து, இழுத்து சென்றதாகவோ புகார் இல்லை. எனினும் மலையடிவார பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தற்போது இங்கு பரவலாக மழை பெய்து உள்ளதால் பச்சை பசேலென்று காட்சி அளிக்கிறது. எனவே இங்குள்ள பகுதிகளில் கால்நடைகளை அதிகளவில் மேய்ச்சலுக்காக கொண்டு செல்கிறார்கள். சிலர் மலையடிவாரத்தில் வெட்டப்பட்டு இருக்கும் அகழியையும் தாண்டி கால்நடைகளை வனப்பகுதிக்குள் அழைத்துச்சென்று மேய விடுகிறார்கள். இதுதவிர மலையடிவார பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் பட்டி போட்டு ஆடுகளை அடைத்து வைத்து இருக்கிறார்கள்.

எனவே வனப்பகுதிக்குள் இருக்கும் சிறுத்தைப்புலிகள் அங்கு வந்து பட்டியில் இருக்கும் ஆடுகளையும், மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகளையும் அடித்து சாப்பிட வாய்ப்பு உள்ளது. எனவே மலையடிவாரத்தில் பட்டி போடவோ, கால்நடைகளை மேய்க்கவோ வேண்டாம். வனப்பகுதிக்குள் செல்லவும் வேண்டாம். அதுபோன்று சிறுத்தைப்புலிகள் கால்நடைகளை கடித்து இருந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story