பழங்குடியின மக்களின் மொழிக்கு அகராதி; கோத்தகிரி ஆதிவாசி பள்ளி ஆசிரியைகள் சாதனை


பழங்குடியின மக்களின் மொழிக்கு அகராதி; கோத்தகிரி ஆதிவாசி பள்ளி ஆசிரியைகள் சாதனை
x
தினத்தந்தி 24 Oct 2018 4:15 AM IST (Updated: 24 Oct 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

பழங்குடியின் மக்களின் மொழிக்கான அகராதி தயாரித்து கோத்தகிரி ஆதிவாசி பள்ளி ஆசிரியைகள் சாதனை படைத்து உள்ளனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குரும்பர் பனியர், காட்டு நாயக்கர், மூலக்குரும்பர் மற்றும் பெட்ட குரும்பர் என எட்டு வகையான பண்டை பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன. எழுத்து வடிவில் இல்லாததால் இவர்களது மொழியை பழங்குடியினர் அல்லாதோர் கற்பது கடினமாக உள்ளது. இந்த மாதிரியான பழங்குடியினத்தவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் மட்டுமே அவர்களது மொழியை கற்று தெரிந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆதிவாசி மக்கள் மொழிக்கு அகராதி தயாரிக்கப்பட்டு உள்ளது. கோத்தகிரியில் உள்ள நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கத்தின் மேற்பார்வையில் விக்டோரியா ஆம்ஸ்ட்ராஜ் நினைவு ஆதிவாசிகள் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை பூவிழி தலைமையில் 12 ஆசிரியைகள் கொண்ட குழுவினர் கடந்த 1½ ஆண்டு காலமாக கோத்தகிரி சுற்று வட்டாரத்தில் உள்ள பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களது மொழியை கற்று சொற்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழி பெயர்த்து அகராதி தயாரித்து உள்ளனர்.

இந்த அகராதியை தயாரித்துள்ள ஆசிரியைகளில் ஒருவர் கூட பழங்குடியினர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்கள் அனைவரும் ஆதிவாசி பள்ளியில் மாணவ– மாணவிகளுக்கு வகுப்புகள் எடுத்து வரும் அனுபவத்தை வைத்தும், ஆதிவாசி மக்களை நேரில் சந்தித்தும் இந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இது குறித்து ஆதிவாசி பள்ளி தலைமை ஆசிரியை பூவிழி கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் 8 வகையான ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். முதலில் அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களில் 50 சொற்களை கொண்டு அகராதி தயாரிக்க முடிவு செய்தோம். ஆனால் பழங்குடியினரின் மொழி பேச்சு வழக்கிலேயே உள்ளதால் அவர்களது வாழ்வியல் சொற்களை ஆவணப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் ஆசிரியைகளுக்கு பூக்கள், பழங்கள், காய்கள், உடல் பாகங்கள் செயல்பாடு ஆகிய தலைப்புகளில் சொற்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் மொழி பெயர்ச்சி முயற்சிக்கு பலன் கிடைத்தது.

50 சொற்கள் என்ற இலக்கைத் தாண்டி தற்போது 300 சொற்களுக்கான அகராதியை தயாரித்து அதனை புத்தகமாக அச்சிட்டு உள்ளோம். இந்த அகராதி ஆதிவாசி இன மாணவ– மாணவிகளுக்கு மட்டுமின்றி ஆதிவாசி மக்களின் கலாசாரம் குறித்து ஆராய்ச்சி செய்பவர்களுக்கும், மற்ற பழங்குடியினர் அல்லாதவர்களும் அவர்களது மொழியை அறிந்து கொள்ள வாய்ப்பாகவும் உள்ளது.

மேலும் ஆதிவாசி குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியை தாய்மொழியில் கற்றுக்கொள்வது மிகவும் எளிதாக இருக்கும். அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியைகளுக்கும் இந்த பழங்குடியினர் மொழிக்கான அகராதி பயனுள்ளதாக இருக்கிறது. எனவே பழங்குடியினரின் மொழியை அறிய வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ள ஆசிரியைகளின் பணியை அரசு ஆங்கீகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story