துப்பாக்கி சூடு வழக்கு: தூத்துக்குடியில் சி.பி.ஐ. முகாம் அலுவலகம் - விசாரணை தீவிரம் அடைகிறது
துப்பாக்கி சூடு வழக்கு தொடர்பாக தூத்துக்குடியில் சி.பி.ஐ. முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்
இது தொடர்பாக சென்னை சி.பி.ஐ. 15 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் தலைமையில் துணை சூப்பிரண்டு ரவி உள்ளிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 13-ந் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்டமாக சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தினர். துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டனர். வழக்கில் புகார் கொடுத்தவர்களை சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று நடந்த விவரங்களை விளக்கிக் கூறி, அதனை பதிவு செய்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரித்தார்கள். அதன்பிறகு பலத்த காயம் அடைந்தவர்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக கலெக்டர் அலுவலக உயர் அதிகாரிகள், அரசு ஆஸ்பத்திரியில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரியிலும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றினர்.
ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்த ஆவணங்களுடன் புதிய ஆவணங்களையும் சேர்த்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதே போன்று துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை, ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட துப்பாக்கிகள் குறித்த அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களையும் பெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டு உள்ளனர்.
இதைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு வழக்கு தொடர்பாக காயம் அடைந்தவர்கள், போலீசார் உள்ளிட்ட பல்வேறு சாட்சிகளை விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக தூத்துக்குடியில் முகாம் அலுவலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் சி.பி.ஐ. முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை தொடங்கியது. அங்கு, இதுவரை பெறப்பட்ட ஆவணங்கள், வாக்குமூலங்கள் அனைத்தையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, துப்பாக்கி சூடு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை மேலும் தீவிரம் அடைந்து வருகிறது.
Related Tags :
Next Story